கற்பனை வித்து கபிலர், அவ்வையார், காளிதாசர், கம்பர், சேக்ஸ்பியர், பாரதியார் முதலான கவிஞர்களின் கற்பனைகளைக் கண்டு இன்று வியந்து பாராட்டுகிறோம். அவர்களின் சிறந்த கற்பனைகளுக்கு உரிய வித்து அவர்கள் குழந்தையாய் இருந்தபோதே அமைந்தது என்பதை எண்ணிப் பார்த்தல் வேண்டும். சேக்ஸ்பியரின் இன்ப நாடகங்களின் வித்து, அவருடைய குழந்தைப் பருவச் சிரிப்பிலேயே இருந்தது. அவர் எழுதிய துன்ப நாடகங்களின் வித்தும் அந்தப் பருவத்து அழுகையிலேயே அமைந்திருந்தது. நரிமருட்டல் என்று கூறப்படும் குழந்தைக் கனவுகளில் அவருடைய கற்பனை வித்துகள் முளைவிடத் தொடங்கின. இன்றைய குழந்தையின் மழலை நாவில், எதிர்கால நாவன்மையும் சொல்வன்மையும் அடங்கி இருத்தல் போல், குழந்தையின் மெல்லிய கைகளின் தசைநார்களில் நாளைய உழவுத் தொழிலுக்கும் தச்சுத் தொழிலுக்கும் ஏற்ற தசைவன்மை அமைந்திருத்தல் போல் தளர்நடையிட்டுத் தடுமாறும் குழந்தையின் கால்களில் எதிர்கால ஓட்டப் பந்தயத் திறன் அமைந்திருத்தல் போல், இளங்குழந்தையின் நரிமருட்டும் கனவில் அரிய பெரிய கற்பனைகள் எல்லாம் அமைந்து கிடக்கின்றன. ஓர் ஆலமரம் எத்தனையோ பழங்களைத் தருகின்றது. ஒவ்வொரு பழத்திலும் எத்தனையோ சிறு விதைகள் உள்ளன. அத்தனை பழங்களின் விதைகளும் ஆலமரங்களாக முளைத்து வளர்வது இல்லை. ஒரு மரத்தின் கோடிக்கணக்கான வித்துகளில் ஒரு சில வித்துகள் தவிர மற்ற எல்லாம் மரமாகும் வாழ்வு பெறாமலே அழிந்து போகின்றன. எஞ்சிய ஒரு சில வித்துகளிலும் இரண்டொன்றே தாய் மரம் போல் நிலைத்து ஓங்கி வளர முடிகிறது. அது போலவே மழலை மொழி பேசும் நா எல்லாம் நாவன்மை பெறுவது இல்லை. ஒரு சிலருடைய நா மட்டுமே நாவலர்க்கு உரிய வாய்ப்பைப் பெறுகின்றன. உணர்ச்சியும் கற்பனையும் வாய்க்கப் பெற்றுக் கனவு காணும் குழந்தைகளிலும் ஒரு சில குழந்தைகளே கற்பனைப் புலவராக வளர்ந்து ஓங்க முடிகிறது. அவர்கள் மட்டுமே தக்க வாய்ப்புப் பெற்றவர்கள், போதிய பயிற்சி நிரம்பியவர்கள், சீரிய முயற்சி உடையவர்கள் எனலாம். |