பக்கம் எண் :

99

Untitled Document

                    6. கற்பனை

குழந்தையின் கற்பனை

          குழந்தையே ஒரு  பாட்டு, ஒரு காவியம் என்று கூறலாம்.
இளங்குழந்தைக்குத்    தூய    உணர்ச்சி உள்ளது. சிறந்த கற்பனை
உள்ளது.   அதன்   அசைவுகளிலும், ஒலிகளிலும், ஒழுங்கு உள்ளது.

       குழந்தையின் சிரிப்பில் அதன் விருப்புணர்ச்சி புலப்படுகிறது;  
அழுகையில்    அதன்   வெறுப்புணர்ச்சி   புலப்படுகிறது. குழந்தை
பிறந்தவுடன்   அழும்  அழுகையிலே முதல் உணர்ச்சி புலப்படுகிறது
எனலாம்.  தாயின்  பாலைச்   சுவைத்து   உண்டு குழந்தை பெறும்
மகிழ்ச்சியிலே   மற்றொரு  வகை உணர்ச்சி வெளிப்படுகிறது. அதன
உறக்கத்தில்   காணும்   கனவுகளிலும்   இன்பதுன்ப  உணர்ச்சிகள் 
புலப்படுகின்றன.   கனவு   காணும்   குழந்தை  உறங்கிக்கொண்டே
சிரிக்கிறது;   அழுகிறது.  கனவின்போது அதன்முகத்தில் தோன்றும்
மலர்ச்சியிலும்    சுருக்கத்திலும்   அதன் இன்பக் கற்பனைகளையும்
துன்பக்   கற்பனைகளையும்   உணரலாம்.   அதன்  கற்பனைகளை
அளந்து      காணமுடியாத   பெற்றோர்கள்   குழந்தையை   நரி  
மருட்டுகிறது     என்று   சொல்லி   மகிழ்வர்.  கனவில்   மட்டும்
அல்லாமல்   நனவிலும்   குழந்தை   எத்தனையோ கற்பனைகளைக்
காணும்.   அவற்றை   அளந்து அறியவல்லவர் யார்?கருநிறக்காக்கை
குழந்தையின்    கண்ணெதிரே, 'கா, கா, கா' என்பன ஒலிக்கும்போது
அந்தக்   குழந்தை    என்னென்ன    கற்பனைகள்   காணுகிறதோ!
சுறுசுறுப்பான    சிட்டுக்குருவியின்  துள்ளலிலும் ஒலியிலும் குழந்தை
காணும்      கற்பனைகள்   என்னென்னவோ!   தாயின்   பொருள்
விளங்காத      தாலாட்டுப்     பாட்டு,    குழந்தையின் மூளையில்
என்னென்ன    கற்பனைகளை   எழுப்புகிறதோ! இவற்றை ஆய்ந்து
உணரும்    திறன்   எவருக்கும்   இல்லை. ஆனால் குழந்தையிடம்
கற்பனை   வளம்   உள்ளது   என்பதை மட்டும் மறுத்தல் இயலாது.