காதலர் வருவதாக ஒருவர் செய்தி கொண்டு வந்ததாகக் கனாக் கண்டாள் காதலி. அத்தகைய கனவு நல்ல கனவு ஆகையால், அதற்கு விருந்தாக ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.* இவ்வாறு உள்ளம் விரும்புமாறு காணும் வாய்ப்பு இருத்தலால் தான், கனவை விரும்புகிறார்கள். இத்தகைய கனவில் நம் உள்ளத்தின் அனுபவமே மிகத் தெளிவான புதிய வடிவு கொண்டு அமைகிறது என்கிறார் அறிஞர் வின்செஸ்டர்.1 கற்பனை என்னும் கனவிலோ, அந்த அனுபவமே அறிவிற்கு இயைந்த உயர்ந்த வடிவுகொண்டு நிலை பெற்ற முறையில் அமைகிறது எனலாம். பகல் கனவு காண்போரும், உள்ளத்தை உள்ளவாறே காண்பதில்லை; உள்ளம் விரும்புமாறுதான் காண்கின்றனர். நடந்த நிகழ்ச்சிகள் சிலவற்றின் அடிப்படையின் மேல் நடக்க வேண்டியவற்றைக் கூட்டிக் காண்கின்றனர். நடக்க வேண்டியவற்றைத் தம் உள்ளம் விரும்பும் வகையில் அமைத்துக் காண்கின்றனர் இல்லையேல், தம் உள்ளம் விரும்பாதன நடப்பதாக எண்ணுவதால், பகல்கனவு காண்பவர் உடனே அங்கிருந்து எழுந்து அதைக் கலைத்து விடுகின்றனர். தம் உள்ளம் விரும்புமாறு காணும்போது தான், அந்தப் பகல் கனவிலேயே நெடுநேரம் திளைத்து இருக்க முயல்கின்றனர். யாரேனும் குறுக்கிட்டு அதைக் கலைத்தால், அவர்கள் மீது உடனே வெறுப்பும் கொள்கின்றனர்.
* திருக்குறள், 1211 1. It is in dreams that our experience seem to be recast in most vivid and original shapes. -C.T. Winchester, Some Principles of Literary Criticism, p.123. |