| தம் உள்ளம் விழைந்த காட்சிக்கு வேண்டாதவற்றை விட்டு, வேண்டிய சிலவற்றைத் தருவித்துக் கூட்டி ஓர் அழகிய கற்பனை அமையச் செய்கிறார். ஆகவே, உள்ளவாறு அமையும் கற்பனைக்குப் பொருள்களை ஒழுங்குபடுத்துதலும் அழகுற அமைத்தலும் தேவை: உள்ளம் விழையுமாறு அமையும் கற்பனைக்கோ, உள்ளவற்றில் சிலவற்றைக் கூட்டலும் கழித்தலும் தேவையாகின்றன. காடுகள் பாலையாக மாறிவிட்டன. வெப்பம் தாங்கமுடிய வில்லை; நெருப்புப் போல் இருந்தது. நிலத்தில் அடி வைக்க முடியவில்லை. அத்தகைய காட்டில் நீர் ஏது? ஒரு பள்ளத்தில் சிறிது நீர் எப்படியோ இருந்தது. யானைக் குடும்பம் ஒன்று தந்தையும் தாயும் மகவுமாக அவ்வழியே வந்தது. நீர் கண்ணில் பட்டது. உடனே குட்டி ஓடிச் சென்று நீரைப் பருகியதோடு கலக்கியும் விட்டது. ஆண் யானை செல்லாமல் ஒதுங்கி நின்று, பெண் யானை குடிக்கட்டும் என்று இருந்தது; குட்டியை அடுத்துப் பெண் யானையும் குடித்த பிறகே எஞ்சிய சிறு நீரைத் தான் குடிக்கச் சென்றது. அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால் கடியவே கனங்குழாய் காடென்றார் அக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின் உண்ணுங் களிறெனவும்உரைத்தனரே.1 அந்தக்காட்டில் வாழும் உயிர்களுக்கு இன்பம் என்பதே இல்லாமற் போய்விட்டது. மரங்களில் இலைகள் எல்லாம் தீய்ந்துவிட்டதால் நிழல் இல்லாமல் பறவைகளும் துன்புற்றன. பெண்புறா வெப்பம் தாங்க முடியாமல் களைத்து வருந்தியது. அதைக் கண்ட ஆண்புறா தன் மெல்லிய சிறகை விரித்து அசைத்துக் காற்றெழுப்பி அந்த வெப்பத்தை ஆற்றி உதவியது. இன்பத்தின் இகந்தொரீஇ இலைதீர்ந்த உலவையால் துன்புறூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள் 1. கலித்தொகை, 11. |