| வாழ்வை விட்டு நெடுந்தொலைவு விலகக்கூடிய ஆற்றல், நாடகம், கதை ஆகிய கலைகளுக்கு இல்லை. நாட்டியத்திற்கு உண்டு. பாட்டுக் கலைக்கும் உண்டு. இரவில் விளக்கு நீங்கிய உடனே இருள் பரவுவது போல் கணவன் தழுவுதல் நீங்கிய உடனே காதலியின் உடம்பில் பசலை பரவுகின்றது என்று திருவள்ளுவர் பாடியுள்ளார். விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு1 கணவன் தழுவிய கை நெகிழ்ந்து சிறிது விலகிய உடனே காதலியின் உடல் வாட்டம் உற்று நிறம் வேறுபடுகிறது-பசலை பரவுகிறது-என்று உரைநடையான கதையில் எழுதினால் அந்தக் கற்பனை அங்குச் சுவை அற்றுப் போகும். ஆனால் கவிதையில் அதுவே சுவை பெறுகின்றது. நாட்டிய அரங்கில் இசையும் தாளமும் நடிப்பும் சேர்ந்து நம்மை அறிவுலகத்திலிருந்து நெடுந்தொலைவு அழைத்துச் செல்வதுபோல், கவிதையிலும் அதன் ஒலிநயமும் அமைப்பும் சேர்ந்து அறிவுலகத்திலிருந்து நெடுந்தொலைவு அழைத்துச் சென்றுவிடுகின்றன. அதனால்தான், கணவன் தழுவ மறந்த உடனே எப்படிப் பசலை பரவமுடியும் என்று ஆராய்ச்சி செய்யாமலே பாட்டின் கற்பனையை அனுபவிக்க முடிகிறது. திருவள்ளுவர் ஊடல் பற்றி அமைக்கும் கற்பனைகளிலும் இந்த உண்மையைக் காண்கிறோம். கணவன் தும்மினான். நூறாண்டு வாழ்க என்று காதலி வாழ்த்தினாள். வாழ்த்திய உடனே தும்மலின் காரணத்தை அவள் எண்ணினாள். வேறு யாரோ ஒருத்தி தன் கணவனை நினைத்த காரணத்தால்தான் அவனுக்குத் தும்மல் வந்தது என்று உணர்ந்தாள் 'உங்களை யாரோ நினைத்துத்தான் தும்மினீர்கள்; நினைத்தவள் யார்? என்று அழுதாளாம். வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யார்உள்ளித் தும்மினீர் என்று2 1. திருக்குறள், 1286 2. ஷெ 1317 |