பக்கம் எண் :

கற்பனை 119

Untitled Document

உடையவன்   வருந்துவதற்கு   அடுத்தாற்போல  வழிப்போக்கரும்
கண்டு   வருந்துகிறார்.  ஆகவே   மனித உள்ளத்தின் அனுபவம்
ஒருவரின்   சொந்த  வாழ்வு   பற்றியது   மட்டும்  அன்று. பிறர்
பிறருடையஅனுபவங்களை    எல்லாம்  உணரக்கூடிய  மன நிலை
மனிதர்க்கு  இயல்பாக  அமைந்துள்ளது.  இது  இடத்தால்  பரந்து
செல்லும் உணர்ச்சி அனுபவமாகும்.

     இவ்வாறு  ஒரு  காலத்து அனுபவத்தை மற்றொரு காலத்தில்
பெறுதலும்   ஓரிடத்து   அனுபவத்தைத்  தன்  இடத்ததாக உற்று
உணர்தலும்   மனித   உள்ளத்தின்    சிறப்பியல்பாக   இருக்கக்
காண்கின்றோம். இந்தசிறப்பியல்பே  கலைத்துறையில்  வளர்ந்து
பண்படும்போது கற்பனைத் திறனாக அமைகிறது.

    இத்தகைய   கற்பனைத்திறன்   இருத்தலால்தான்  திருத்தக்க
தேவர்,   இளங்கோவடிகள்   முதலான   துறவிகளும்  காதலைப்
பாடவும் முடிகின்றது.உள்ளத்தை உருக்கவல்ல அன்பு நட்பு ஆகிய
அனுபவங்களைக்  கொண்டே  அவர்கள்  காதல் உணர்ச்சியையும்
கற்பனை  செய்து  பாடியுள்ளனர்.  உள்ளதைக்கொண்டு இல்லதை
எல்லாம்     படைத்துக்     கூறும்   இந்தக்    கற்பனைத்திறன்
கலைத்துறையின்   வளர்ச்சிக்கு   மட்டும்   அல்லாமல்  அறிவுத்
துறையின் வளர்ச்சிக்கும் பேருதவி புரிந்துள்ளது.

     தொடக்க    காலத்தில்   மொழி   எப்படி  இருந்திருக்கும்,
சமுதாயம்     எப்படி     அமைந்திருக்கும்,   சமயம்   எப்படித்
தோன்றியிருக்கும்   என்பவற்றை   எல்லாம்  அறிஞர்கள் ஓரளவு
ஆராய்ந்து கூறுகின்றார்கள்.யாரும்  சென்று கண்டு அறிய முடியாத
அந்தப்   பழங்கால   நிலைகளை  அறிஞர்கள் ஒருவாறு எண்ணி
உணர்ந்து   கூறுவதற்குத்  துணையாய் இருப்பது எது? உள்ளதைக்
கொண்டு   இல்லதை   அளந்து காண முயலும் கற்பனைத் திறனே
ஆகும்.   அறிவியல்   துறையில் இவ்வாறு உதவும் இந்தத் திறனே,
கலைத்துறைக்கு இன்றியமையாததாக உள்ளது.

கற்பனையால் கவர்ச்சி

     சிறப்பு   இல்லாதவற்றைத்   தள்ளிச்   சிறப்பு உள்ளவற்றை
மட்டும்    கொள்வதால்   கலை கவர்ச்சி உடையதாய் அமைகிறது
என்பதைக்     கண்டோம்.   வரலாற்றிற்கு   இல்லாத   கவர்ச்சி
காவியத்திற்கு   அமைந்திருப்பதும்,   நிழற்படத்தைவிட   ஓவியம்