| கவர்ச்சிமிக்கதாய் இருப்பதும் இதனாலேயே ஆகும். வரலாறு நிழற்படம் முதலியவை, எல்லாப் பொருளும் கொட்டிக் கிடக்கும் சரக்கறை போன்றவை; ஓவியம் காவியம் முதலானவை, அலங்காரத்திற்கு உரிய வகையில் அமைக்கப்பட்ட தோரணமும் கொலுவும் போன்றவை; அதனால்தான் கலைகள் கவர்ச்சி மிக்கனவாக விளங்குகின்றன. மனத்தின் கண்ணும் செவியும் நனவில் கண்ட காட்சியையே கனவிலும் காண்கின்றோம். கனவில் அதைக் காணும்போது அந்தக் காட்சிக்கு உரிய பொருள்கள் நம் எதிரே இல்லை. ஆயினும் கனவில் அவை தோன்றுகின்றன. கனவு காணும் மனம் அவற்றைப் படைத்துக்கொள்கிறது. முன் ஒரு நாள் கண்டதை இன்று படைத்துக் காண்கிறது. வேறு எங்கோ கண் திறந்து கண்டதை இங்கே கண் மூடி உறங்கும்போது படைத்துக் கொள்கிறது. இவ்வாறு படைத்துக் காணும் அனுபவமே கண்திறந்து வாழும் நனவில் ஏற்படுமானால் அதைக் கற்பனை என்கிறோம். வீட்டின் மூலையில் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் மனிதர் சென்ற ஆண்டு அதே இடத்திற்கு வந்துசென்ற தம் நண்பனை நினைத்துக் கொள்கிறார். நண்பனுடைய தோற்றம் பார்வை முறுவல் சொல் செயல் யாவும் அவருடைய நினைவுக்கு வருகின்றன. ஆனால் நண்பன் அப்போது அங்கே இல்லை. அவருடைய மனம் அவ்வாறெல்லாம் படைத்துக் காண்கிறது. இது கற்பனை ஆகும். அவர் நண்பனைத் தன் புறக் கண்களால் காணவில்லை. புறக் கண்ணில் படும் நாற்காலியும் மேசையும் சுவர்களும் படங்களும் சிறிது நேரம் மறைந்து நிற்கின்றன. அந்தச் சிறிதுநேரத்தில் அங்கு இல்லாத நண்பனுடைய முகம் முதலியவற்றை அவர் காண்கிறார். அவருடைய மனம் வேறு ஒரு கண் பெற்று அந்தக் காட்சியை அவருக்குக் காட்டுகிறது. அவை அகக் கண் என்று கூறுவார்கள். மனத்தின் கண் (mind's eye) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அது காட்டுவதே கற்பனைக் காட்சி ஆகும். காட்சி போலவே கேள்வியும் கற்பனையில் உண்டு. நண்பனுடைய குரலும் சொல்லும் நினைவிற்கு வருமானால் அது கற்பனைக் கேள்வி ஆகும். மனம் படைத்துக்கொண்ட செவியால் கேட்டு அறிந்தவை அவை. அதை மனத்தின் செவி (mind's ear) என்பர். |