| அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று இருமிடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே.1 இது கழிந்து போன இறந்த காலத்தை நினைந்து இரங்கிய இரக்கத்தால் ஏற்பட்ட கற்பனை. வாழ்விலிருந்து பின்னோக்கிச் சென்ற கனவு என்று இதனைக் குறிப்பிடலாம். அந்த நிகழ்ச்சி, புலவர் பாடிய அப்போது நிகழ்ந்தது அன்று; கல்லா இளமையின்போது பல ஆண்டுகளுக்கு முன்னே நிகழ்ந்தது. அதனை அவ்வாறே கற்பனை செய்த மனக் கண்ணின் திறத்தை இங்குக் காணலாம். இல்லன படைத்தல் ஒரு காலத்தில் நிகழ்ந்ததை மற்றொரு காலத்திலும் ஓர் இடத்தில் நிகழ்ந்ததை மற்றோர் இடத்திலும் படைத்துக் கொள்ளும் கற்பனைத் திறம் போலவே, எக்காலத்திலும் எவ்விடத்திலும் இல்லாததைப் படைத்துக் கொள்ளும் கற்பனைத் திறனும் உண்டு. அது முற்றிலும் இல்லாத ஒன்றைப் படைத்த கற்பனையாகத் தான்றலாம். ஆனால் உண்மை அது அன்று அதுவும் ஓரளவு உள்ளதன் அடிப்படையில் இல்லது படைத்த கற்பனையாகும். உள்ளதை நேரே அடிப்படையாகக் கொள்ளாமல் அதைத் திரித்து அமைத்துக்கொண்ட கற்பனை எனலாம். முற்றிலும் இல்லாததைப் படைக்கும் ஆற்றல் மனத்திற்கு இல்லை. கனவின் அனுபவம் இதையும் விளக்கவல்லது ஆகும். என்றோ கண்டதையும் எங்கோ கண்டதையும் நாம் கனவில் காண்பது போலவே,என்றும் எங்கும் காணாத ஒன்றையும் கனவில் காண்பது உண்டு. கரடியின் உடம்பும் சிங்கத்தின் தலையும் உடைய ஒரு விலங்கின்மேல் ஊர்ந்து வானத்தில் முகில்களுக்கு இடையே நாம் பறந்ததாகக் கனவு காணலாம். இது நனவில் என்றும் எங்கும் ஏற்படாத-ஏற்பட முடியாத-முற்றிலும் இல்லாத அனுபவம் ஆகும். ஆயினும் இதுவும் உள்ளத்தை அடிப்படையாகக் கொண்டு கண்ட கனவே ஆகும். சிங்கம் கரடி வானம் முகில்கள் ஊர்தல் பறத்தல் ஆகிய யாவும் உலகத்தில் உள்ளவையே. உள்ள இவை யாவும் 1. புறநானூறு, 243. |