| ஒவ்வொரு பகுதியாகச் சேர்ந்து திரிந்து ஓர் அனுபவமாகிக் கனவு நேரும்போது இல்லாத ஒன்று என மயங்குகிறோம். உண்மையை ஆராய்ந்தால் இந்தத் திரிபுகளுக்கு அடிப்படையில் உள்ளதன் அனுபவம் விளங்கக் காண்கிறோம். முழுதும் இல்லாது படைத்தலாகக் கூறப்படும் கற்பனையும் அத்தகையதே ஆகும். அதன் அடிப்படையிலும் உள்ளதன் அனுபவம் உண்டு. அது மிகத் திரிந்து வேறுபட்டு அமைவதால்முழுதும் பொய்யான கற்பனை என்று கருதுகிறோம். மழை பெய்தது. பாறைமேல் நின்ற மழைநீரில் மொக்குள் (குமிழி) பல தோன்றின. அவற்றைக் கண்ட குரங்கு, பக்கத்தில் இருந்த சூரல்கொம்பு ஒன்றைக் கொண்டு அந்த மொக்குகளை அடித்து விளையாடியதாகப் புலவர் பாடியுள்ளார். குரங்கின் தலைவன் குருமயிர்க் கடுவன் சூரலஞ் சிறுகோல் கொண்டு வியலறை மாரி மொக்குள் புடைக்கும்...1 . சிறுவர்கள் தெருவில் மழைநீரில் மொக்குகளைக் கண்ட போது இவ்வாறு வியந்து பார்ப்பதும், கோல் கொண்டு அவற்றை அடித்து உடைப்பதும் வழக்கம். சிறுவர்களின் இந்த விளையாட்டைக் கண்ட புலவர், சிறுவர்போல் குதித்தும் தாவியும் விளையாடும் இயல்புள்ள குரங்கின்மேல் இந்தச் செயலை ஏற்றிப் பாடியுள்ளார். குரங்கு, வேண்டும் என்று சிறுகோல் கொண்டு மொக்குளை அடித்தும் இருக்கலாம். அடிக்காமலும் இருக்கலாம். புலவருடைய கற்பனை, சிறுவரின் விளையாட்டைக் குரங்குக்கு இயைத்துக் காட்டியதாகக் கொள்ளலாம். பாறையின்மேல் சிறு மேகங்கள் மெல்லத் தவழ்ந்து வந்தனவாம். அப்போது குரங்கு ஒரு கொடியைப் பறித்து அந்த மேகங்களை அடித்து விளையாடியதாகப் பாடியுள்ளார் புலவர். மந்திக் காதலன் முறிமேய் கடுவன் தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப் பொங்கல் இளமழை புடைக்கும்...2 1. ஐங்குறுநூறு, 275 2. குறுந்தொகை, 276. |