பக்கம் எண் :

126இலக்கியத் திறன்

Untitled Document

உண்மை அல்லாதன

     கற்பனை  விழையும் உள்ளம்,வாழ்க்கையோடு தொடர்புற்று
இருக்க    விரும்புவது இயற்கை.  ஆயின்,  வாழ்க்கை என்னும்
நிலத்திலிருந்து சிறிதுஉயர்ந்து பறக்கும் காற்றாடி போன்றது அது;
வாழ்க்கையோடு   தொடர்பற்று   மனம்  போனவாறு  உயர்ந்து
பறப்பது அன்று.

     சில வேளைகளில் அந்த உள்ளம், நூலற்ற காற்றாடி போல்,
வாழ்க்கையின்    உண்மையோடு   தொடர்பற்றதாய்,   எங்கோ
பறத்தலும்   உண்டு.   அப்போது அமையும் கற்பனை, அறிவின்
அடிப்படை   இழந்ததாய்ப்   பொருளற்ற   உயர்வு நவிற்சியாய்
முடியும்.1


     ஒருத்தி தன்  காதலனை நினைத்து கலங்குகிறாள்; கண்ணீர்
வடிக்கிறாள்.   மலர்  போன்ற   அவளுடைய கண்களில் உள்ள
நீர்த்துளிகள்,  மாரிக்காலத்து மலர்களில் உள்ள மழைத்துளிகளை
நினைவூட்டுகின்றன.


     நீர்வார் நிகர்மலர் கடுப்ப
    அழுதல் மேவல ஆகிப்
    பழிதீர் கண்ணும்...2

    இவ்வளவும் உண்மையின் தொடர்பு நீங்காத கற்பனையாகும்.
புலவரின்  உள்ளம்   அதற்கு  அப்பாலும்  செல்கிறது. அங்கே
உண்மையின் தொடர்பு அற்றுவிடுகிறது.கண்களினின்றும் ஓயாமல்
வடியும் கண்ணீரைக் காண்கிறார்   புலவர். நாள்தோறும் அழுது
அழுது நீர் வடிதல்   நிற்கவே இல்லை.  நீரற்ற குளத்தை நீரால்
நிறைப்பதற்காக  முயலும்   முயற்சி  போல் உள்ளது என்கிறார்.
குளம் எங்கே?  குளத்தை நிரப்ப இறைக்கப்படும் நீர் எவ்வளவு?
கண்ணீர்  எவ்வளவு?   கற்பனை   உண்மையோடு  பொருந்தி
நிற்கவில்லை; நூலற்ற காற்றாடியாகிவிட்டது.


     

     1. Now the working imagination sometimes gives us
such   dream   like   results,   capricious, irrational, not
codformed to known laws of Nature; but then we call it
Fancy. Fancy is same   imagination  voluntarily  working
without check or guidance from reason.

     - C.T.Winchestor,   Some   Principles  of Literary
Criticism, p.123.

     2. அக,11.