மயிர் பொருந்திய முதுகைத் தடவுகின்றன. எருமை அந்த இலைகளின் தடவுதலை இன்புறப் பெற்றவாறே, அசை போடுகிறது. அசை போடும் போது, மேய்ந்த கழுநீர்ப் பூக்களின் தேன் மணம் வெளிப்படுதலால், முற்றாத இளங்கள்ளின் மணம் வீசுகிறது. கொழுமீன் குறையை ஒதுங்கி வள்ளிதழ்க் கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை பைங்கறி நிவந்த பலவின் நீழல் மஞ்சள் மெல்லிலை மயிர்ப்புறம் தைவர விளையா இளங்கள் நாற மெல்குபு பெயராக் குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும்...1 எருமைக்கு இந்த இன்பங்கள் எல்லாம் ஒரே முறையில் ஒருங்கே கிடைத்திருத்தல் அரிது. ஆயினும் காட்டு மல்லிகைப் பூப்படுக்கை முதல் மஞ்சள் இலையின் தடவுதல் வரையில் எல்லாம் எருமைக்குக் கிடைக்கக் கூடிய இன்பங்களே ஆதலின், இது வெறுங் கற்பனை ஆகாமல், உள்ளம் விழைந்த உண்மைக் கற்பனையாகவே கொள்ளத் தக்கதாகும். பழங்காலத்தில் இசைக் கலைஞராக விளங்கிய பாணர் சிலர் தலைவனுடைய தகாத ஒழுக்கத்திற்குத் துணையாக இருந்தனர். தலைவன் பரத்தையின் வீட்டிற்குச் செல்வதற்கும் அவளோடு உறவு கொண்டு தங்குவதற்கும் உதவியாக இருந்தனர். அதனால் குடும்பப் பெண்கள் பாணரைப் பழிப்பதற்கும் இடமாயிற்று தோழி ஒருத்தி அவ்வாறு பழிப்பதாகப் புலவர் ஓரம்போகியார் பாடியுள்ள பாடல் பின் வருமாறு: "தலைவ! உன் பாணன் எங்களிடம் அன்புடையவன் போல் நடித்து, இறுதியில் இவ்வாறு உனக்குப் பரத்தையின் உறவை ஏற்படுத்தி வைத்தான் அதனால் பாணர் மரபுக்கே பழி ஆயிற்று. உன்னுடைய ஒரு பாணன் பொய்யனாய் நடக்க, பிரிந்து வாழும மகளிர்க்கு இனிமேல் எல்லாப் பாணருமே கள்வர் போல் ஆவர். ஒருநின் பாணன் பொய்யனாக உள்ள பாண ரெல்லாம் கள்வர் போல்வர் நீ அகன்றிசி னோர்க்கே.2 1. சிறுபாணாற்றுப்படை, 41-46. 2. குறுந்தொகை, 127 |