உண்மை விலகல் இந்தப் பாட்டின் கற்பனை, உண்மையோடு இயைந்தது, பின்வரும் பாட்டிலும் பாணனைப் பழிப்பதாகக் கற்பனை உள்ளது. ஆயின், அதில் அமைந்துள்ள கூற்று உண்மையை விட்டுப் பெரிதும் விலகியது காணலாம். இங்கும் தோழி பாணனைப் பழித்துப் பேசுகிறாள்.பாணனைப் பார்த்தே பேசுகிறாள் "பாண! நேற்று இரவு இசையரங்கில் ஒலி கேட்டது. அதைக் கேட்ட அன்னை அதை உன் இசை என்று உணராமல் பேய் அலறுகிறது என்றாள். என் தங்கையோ, தன் அறியாமையால் நாய் ஊளையிடுகிறது என்றாள். நான்தான் உண்மையை உணர்ந்து, அது உன் இசை என்றேன்." பேணி இசைவளர்க்கும் நந்திபெம்மான் பேரரங்கில் ஏணொலி நென்னல் இரவு எழலும் - பாண! கேள்; பேய்என்றாள் அன்னைதான்: பேதைஎன் தங்கையும் நாய்என்றாள்: நீ என்றேன் நான்.1 பாட்டு, படிக்கச் சுவையாக இருக்கிறது; சொற்பொருளும் அழகாக அமைந்துள்ளது; கற்பனையும் சிறு பிள்ளைகளின் வேடிக்கை விளையாட்டுப்போல் உள்ளது. ஆயினும் உண்மையை விட்டுப் பெரிதும் விலகி நிற்பதால் இது வெறுங்கற்பனை என்று கருதத் தக்கதாம். ஏனெனில், மன்னன் அரங்கில் பாடிய பாணனுடைய இசை எவ்வளவு தரம் குறைந்ததாயினும் பேயின்; அலறலுக்கும் நாயின் ஊளைக்கும் நிகராகக் கேட்கா தன்றோ? காதலி பிரிவாற்றாமல் வருந்துவதாகப் பாடும்போது, இன்பம் தரும் பொருள்கள் எல்லாம் துன்பம் தருவதாகப் பாடுதல் மரபு. பாரதியாரும், வேண்டும் பொருளை எல்லாம் --மனது வெறுத்து விட்ட தடி... தாயினைக் கண்டாலும் --சகியே சலிப்பு வந்த தடி2 1. நந்திக் கலம்பகம் 2. பாரதியார் பாடல்கள், கண்ணன் என் காதலன், |