எனப் பாடியுள்ளார். இவ்வாறு பிற பொருள்களும் தம் இயல்பான இனிமை இழந்துவிடுவதாகப் பாடுதல் உண்டு. பாலும் கசக்கும்; படுக்கை வெறுக்கும் என்றெல்லாம் கூறுவர். பாலும் கசந்த தடி -- சகியே படுக்கை நொந்த தடி கோலக் கிளி மொழியும்--செவியில் குத்த லெடுத்த தடி.1 சிறுவர்களை இனிப்பு இனிப்பு என்று சொல்லி, கருப்பட்டிக் குள் கசப்பு மருந்து வைத்து ஊட்டிவிடுவது உண்டு. அதுபோல் சந்தனம் சந்தனம் என்று சொல்லி நெருப்பைப் பிழிந்து சாறாக்கித் தன் உடம்பின் மேல் யாரோ தடவி விட்டதாகக் கூறுகிறாள் பிரிவாற்றாத காதலி ஒருத்தி. செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச் சந்தனம் என்று ஆரோ தடவினார் - பைந்தமிழை ஆய்கின்ற கோன்நந்தி ஆகம் தழுவாமல் வேகின்ற பாவியேன் மீது2 இவை உண்மையோடு இயைந்த கற்பனை, ஆயின் உயர்வு நவிற்சியாகக் கூறத் தொடங்கி, காதலியின் உடம்பை நிலா எரிப்பதாகவும், தென்றல் காற்று கொதிப்பதாகவும், சந்தனம் சுடுவதாகவும் பாடுதல் உண்மையோடு இணைந்து நிற்கவில்லை. காதலியின் துயர மிகுதியால் சுவையான பாலைச் சுவைக்கும் ஆர்வம் மாறி தன்மேல் வெறுப்பு வளர்தல் இயற்கை; மெத்தென்ற படுக்கையில் படுக்கவும் மனம் பொருத்தாக் காரணத்தால் அதுவும் வெறுக்கத் தக்கது ஆவதும் இயற்கை. ஆயின், மனநிலை எவ்வளவு மாறினாலும், குளிர்ந்த சந்தனம் நெருப்புப்போல் சுடுவதில்லை; நெருப்பின் சாறுதான் அது என்றும், சந்தனம்அன்று என்றும் மனம் மயங்குவதும் இல்லை. ஆதலின் இதுவும் மேற்குறித்தவாறு வேடிக்கையான கற்பனை எனக் கொள்ளத்தக்கதே ஆகும். இது வெறுங் கற்பனையாயினும் கலைக்கு அணி செய்வதாகச் சுவை மிகுப்பதாக உள்ளது என்பது உண்மையே 1. பாரதியார் பாடல்கள் 'தூண்டிற் புழுவினை' 2.நந்திக்கலம்பகம் |