பக்கம் எண் :

கற்பனை 137

Untitled Document

இவ்வாறு   மேன்மேலும்  அணி   செய்து சுவை கூட்டுவதற்குக்
கலையில்   இடம்   உண்டு;  எனினும்   உள்ளத்து   உணர்ச்சி
உண்மையோடு   இயையாமல்   மேற்போக்காக - வேடிக்கையாக
அமையும்   இடங்களுக்கே  அது பொருந்துவதாகும். உள்ளத்தின்
ஆழ்ந்த உணர்ச்சியைப் புலப்படுத்தும் இடத்திலோ, உண்மையைத்
தெளிய   உரைக்கும்    இடத்திலோ,   அது பொருந்துவதில்லை.
எங்கேனும்   வெறுங்   கற்பனையின்   அணி இடம் பெறுமாயின்,
அங்கே   அகத்து  உண்மை பற்றிய நோக்கம் மிகவில்லை என்று
கருதுகிறார் அறிஞர் ஷார்ப்.*

கண்டவை :கருதியவை

    சில கற்பனைகள் நடத்திருக்கக் கூடும் என்று கருதத்தக்கவை
புலவர்   கண்ணால்  கண்ட  உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படை
கொண்டு  அமைந்தவை   என்று   அவற்றைக்   கூறல் இயலாது;
புலவருடைய  காட்சிக்கு  அப்பாற்பட்டவை ஆயினும், கருத்திற்கு
இயைந்தவை  அவை.  ஆதலின், நடந்திருக்க முடியாதவை என்று
தள்ளிவிடல் பொருந்தாது.

     காட்டுப் பன்றி தினை உண்பதற்காகப் புனத்திற்கு வருகிறது.
அங்கே  அதனைப் பிடிக்கப் பொறிக் கூண்டு வைத்திருக்கின்றனர்
வேட்டுவர்.  அதற்குள்  நுழைந்து   பன்றி   அகப்பட   இருந்த
வேளையில்,  பக்கத்தே இருந்த பல்லி ஒன்று ஒலிக்கிறது. அதைக்
கேட்டதும்  பன்றி மெல்ல மெல்லப் பின் வாங்கித் திரும்பி வந்து
கல் பிளவுக்குள்   அமைந்த தன் இருப்பிடத்துக்கே சென்று தங்கி
விடுகிறது.

      பன்றி
     ஓங்கு மலை வியன்புனம் படீஇயர் வீங்குபொறி
     நூழை நுழையும் பொழுதின் தாழாது
     பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென
     மெல்ல மெல்லப் பிறகே பெயர்ந்துதன்
     கல்லளைப் பள்ளி வதியும்...1


     * The vision of inner reality is not intense enough
      to make it impatient of accessories or ornament.

     -J.C.Shairp, Aspects of Poetry, p.156.


      1. நற்றிணை 93.