அக்காலத்தில் ராகு கேது என்னும் பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுங்க முயல்வதாக மக்கள் கருதியிருந்த கருத்தே அதற்குக் காரணமாகும். இன்று அறிவியல் காரணமாக மக்களிடையே வளர்ந்துள்ள அறிவால் அக்கருத்து மாறிவிட்டது. பூமியின் நிழலால் ஏற்படுவது சந்திர கிரகணம் என்னும் தெளிவு பெற்றுள்ளபடியால், இன்று பாம்பு விழுங்குவதாகப் புலவர் எவரும் பாடுவது இல்லை. பழங்காலத்தில் மேகம் கடலுக்குச் சென்று நீரை முகந்து கொண்டு வானத்தில் ஏறிவந்து மழை பொழிவதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். நிறைந்த சூல் கொண்டமாது வருந்திக் களைத்து மெல்ல நடந்து வருதல் போல் நீர் நிறைந்த மேகம் வானத்தில் மெல்ல அசைந்து வந்ததாகப் பாட்டு உள்ளது. முந்நால் திங்கள் நிறைபொறுத்து அசைஇ ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர் போல நீர்கொண்டு விசும்புஇவர்கல்லாதுதாங்குபுபுணரி செழும்பல் குன்றம் நோக்கிப் பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே.1 ஆகையால் கடலில் நீர் மொள்ளுவது என்ற கருத்திற்கோ பழையது புதியது என்ற கூற்றிற்கோ இன்று இடம் இல்லை. பொருட்காட்சிச் சாலையில் பழங்காலத்து வேலையும் வில்லையும் பார்ப்பது போல் அந்தப் பழைய பாட்டுகளின் கற்பனையை இன்று படித்து மகிழ முடியும். அவ்வளவே அல்லாமல் இன்றையக் கற்பனைகளை அந்தக் கருத்துகள் அணுகுவதற்கு இடம் இல்லை. ஆகவே அறிவு அமைத்த அடிப்படையைக் கொண்டே கற்பனை அமைகின்றது எனலாம். இயற்கையை உள்ளவாறே பாடும் பாட்டுகளிலும் இந்த வேறுபாட்டைக் காணலாம். டென்னிசன் என்னும் ஆங்கிலப் புலவர் அறிவியல் வளர்ந்த காலத்தில் வாழ்ந்தவர். ஆகையால் இயற்கையின் மேற்போக்கான தோற்றத்தை மட்டும் பாடாமல் அறிவியலோடு ஒட்டிய உண்மைகளையும் பாடியுள்ளார். குடத்தில் நீர் கொண்டுவரும் மகளிர் குளத்து அருகே செல்லும் போது புது நீர் கொள்வதற் காகப் பழநீரைக் கொட்டிவிடுவதுபோல், கார்காலத்துப் பெருமழை 1. குறுந்தொகை, 287 |