பக்கம் எண் :

கற்பனை 143

Untitled Document

அரும்பெடுத்து   விட்டது. ஆயினும் அவன் வரவில்லை. அரும்பு
நிறைந்த அந்த    முல்லைக்   கொடியைப்   பார்க்கிறாள் காதலி.
கார்காலம் தன்னைப்  பார்த்து-தான் பிரிவாற்றாமல் வருந்துவதைப்
பார்த்து - எள்ளி   நகைப்பதாக   உணர்கிறாள். நகைக்கும்போது
பல்தெரியும் அல்லவா?  நகைக்கும் கார் காலத்தின் பற்கள் அந்த
முல்லைக் கொடியின் அரும்புகளாக உள்ளனவாம்.

     முல்லைத் தொகுமுகை இலங்கெயி றாக
     நகுமே தோழி நறுந்தண் காரே.1


     அந்த   முல்லைக்  கொடியை உற்றுப் பார்க்கிறாள். அந்தக்
கொடியே   தன்னை   நோக்கி நகைப்பதாக உணர்கிறாள். பிரிந்து
தனியே   வருந்துபவரைப்   பார்த்து அவர் துன்புறும் வேளையில்
இவ்வாறு நகைப்பது தகுமா என்று கேட்கிறாள்.

     முல்லை வாழியோ முல்லை! நீநின்
     சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
     நகுவை போலக் காட்டல் தகுமோ
     மற்றிது தமியோர் மாட்டே2


     காதல்  மிக மிக,   பிறர்  என்ன  கருதுவார்களோ  என்ற
கவலையும்   குறைந்து  போகிறது. பிறர்க்கு அஞ்சியும் தயங்கியும்
ஒழுகும்   இயற்கையும்   மாறிவிடுகிறது.   அப்போது காதலி தன்
போக்கில்   ஒரு   மாறுதல் உணர்கிறாள். இது வரையில் தன்னை
விட்டுச்   சிறிதும்   நீங்காமல்   நின்ற   நாணம் என்னும் பண்பு,
இப்போது மெல்ல நீங்கிச்  செல்வதாக உணர்கிறாள். அந்த நாணம்
தன்னிடம்     இத்தனை   காலமாக இருந்தும், இப்போது பிரிந்து
போகிறதே என்று எண்ணி  வருந்துகிறாள். ஆயினும் அதற்கு இனி
வாழ்வு இல்லாததைக் கருதி இரங்குகிறாள்.

     அளிதோ தானே நாணே நம்மொடு
     நனிநீடு உழந்தன்று மன்னே; இனியே
     காமம் நெரிதரக் கைந்நில் லாதே3


     1. குறுந்தொகை, 126
     2. குறுந்தொகை, 162
     3. ஷெ 149