கடல் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நள்ளிரவிலும் அதன் ஒலி அடங்குவதில்லை. இது இயற்கை. ஆனால் பிரிவாற்றாமல் இரவெல்லாம் கண் விழித்து வருந்தும் காதலிக்கும் அதன் இயற்கையான ஒலி, ஏதோ துன்பத்தால் எழும் ஒலியாகக் கேட்கிறது. "கடலே! நீயும் என் போல் துயருற்று வருத்துகிறாயோ? உன்னை வருத்தியவர் யார்? நள்ளிரவிலும் உன் குரல் கேட்கிறதே" என்கிறாள். யாரணங் குற்றனை கடலே... நள்ளென் கங்குலும் கேட்குநின் குரலே.1 மகள் நீர் வார்த்துப் போற்றிய வயலைக்கொடியின் அருகே செல்கிறாள் செவிலித்தாய். "வயலைக் கொடியே! நீ வாடிவிட்டாயே!கால் சிலம்பு ஒலிக்கத் திரும்பத் திரும்பச் சென்று நாள்தோறும் உனக்கு நிரம்ப நீர் வார்த்துக் காப்பாற்ற இனிமேல் யார் இருக்கிறார்கள்? உன்னைக் காப்பாற்றிய என் மகள் பிரிந்து போய்விட்டாளே" என்கிறாள். வாடினை வாழியோ வயலை!...நாடொறும் பல்கிளைக் கொடிக்கம்பு அலமர மலர்ந்த அல்குல் தலைக்கூட்டு அங்குழை உதவிய வினையமை வரல்நீர் விழுத்தொடி தத்தக் கமஞ்சூல் பெருநிறை தயங்க முகந்துகொண்டு ஆய்மடக் கண்ணள் தாய்முகம் நோக்கிப் பெய்சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள் வைகலும் ஆரநீர் ஊட்டிப் புரப்போர் யார்மற்றுப் பெறுகுவை அளியை நீயே2 பிரிவாற்றாமல் வருந்தி வருந்திக் காதலி தன்அறிவும் கலங்கி நிற்கிறாள். காதலன் தன்னை மறந்துவிட்டான் என்று ஏமாற்றமுற்றவளாய் வருந்துகிறாள். யாரையேனும் அனுப்பி அவனுக்குத் தன் நிலை பற்றிச் சொல்லிப் பார்க்க வேண்டும் என்று ஏங்குகிறாள். கடற்கரைச் சோலையைப் பார்க்கிறாள்; அது அசையவில்லை; உப்பங்கழியைப் பார்க்கிறாள்; அது ஒரு
1. குறுந்தொகை 163 2. அகநானூறு, 383 |