மாறுதலும் இல்லாமல் வழக்கம் போல் ஓடுகிறது. மணம் கமழப் பூத்திருக்கும் புன்னை மரத்தைப் பார்க்கிறாள்; அதுவும் அசையவில்லை. ஒரு நண்டைப் பார்க்கிறாள்; அது சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. உடனே அதனிடம் நம்பிக்கை கொள்கிறாள். அது தனக்காக ஏதேனும் செய்யக்கூடும் என நம்புகிறாள். "நண்டே! கடற்கரைச் சோலையும் சொல்லாது. உப்பங்கழியும் கூறாது. புன்னை மரமும் மொழியாது. காதலரிடம் என் நிலையை எடுத்துரைக்க வேறு யாரும் இல்லை. நீ தான் அவரிடம் போய் என் நிலையைச் சொல்ல வேண்டும்" என்கிறாள். கானலும் சுழறாது கழியும் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது ஒருநின் அல்லது பிறிதியாதும் இலனே... துறைவனை நீயே... சொல்லல் வேண்டுமால் அலவ...1 இங்கு உள்ள கற்பனை உண்மையை விட்டு விலகிய வெறுங்கற்பனை போல் தோன்றுகிறது. கடற்கரைச் சோலையும் உப்பங்கழியும் புன்னை மரமும் தனக்காகப் போய்ப் பேசும் என்று எண்ணுவது பொருந்தாது. நண்டு பேசும் என்று நம்புவதும் பொருந்தாததே. ஆனால் காதலி என்ன மன நிலையில் இருந்து இவ்வாறு எண்ணுகிறாள் என்று கருதிப் பார்க்க வேண்டும். அறிவுடைய ஒருவன் கண்டதைப் பேசுவானானால் அது உளறலாகும்? பித்துப்பிடித்த ஒருவன் அவ்வாறு பேசுவானானால் அது அவனுக்கு இயற்கை என்றே கொள்ள வேண்டும். அதுபோல் இங்குக் காதலியின் மனநிலை ஏமாற்றத்தால் குழம்பியிருத்தலை அறிவு கலங்கியிருத்தலைக் கருத்தில் கொண்டால், இந்தக் கற்பனை பொருத்தமானதே என்பதும் உண்மையோடு இயைந்ததே என்பதும் விளக்கமாகும். காமுற்ற கையறவோடு எல்லா இராப்பகல் நீமுற்றக் கண்துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால் தீமுற்றத் தென்இலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாம்உற்றது உற்றாயோ வாழி கனைகடலே2
1. அகநானூறு, 170 2. திருவாய்மொழி, 2-1-4 |