வெவ்வேறிடத்தில் கண்ட வேறுபட்ட இரண்டு காட்சிகளால் அவருடைய மனம் ஒரு கற்பனையை அமைத்தது. அதில் பலவற்றையும் வருணிக்கவில்லை. உள்ளத்தில் உணர்வுடன் பதிந்த சிலவற்றை மட்டுமே அவர் படைத்தார். தனித்தனியே கண்ட வேறு வேறு பகுதிகள் சேர்ந்து ஒரு முழுமை பெற்றதை இக் கற்பனையில் காணலாம். இதனைப் படைப்புக் கற்பனை (creative imagination) என்பர். இயைபுக் கற்பனை அரண்மனையில் அரசிக்குக் கோபம் வந்தது. இளநங்கை யராக இருந்த அவருடைய தோழிமார் வணங்கிக் கை கூப்பி நின்றார்கள். இந்தக் காட்சியைக் கண்ட புலவர் இதை மறக்க வில்லை.சில வாரம் கழிந்த பிறகு ஒரு தாமரைப் பூ ஒன்று நடுவே மலர்ந்து விளங்க அதைச் சூழ்ந்து ஆம்பல் மலர்கள் குவிந்து கிடந்தன. காற்று வீசிய காரணத்தால் அவை அசைந்து தளர்ந்தன. புலவர் உள்ளத்திற்குக் குவிந்த ஆம்பல்களின் வாட்டமும் மலர்ந்த தாமரையின் பெருமிதமும் அரண்மனைக் காட்சியை நினைவூட்டின. ஆம்பல்கள் கை குவித்துத் தொழும் இளந்தோழிமார் போல் குவிந்து வாட, அவற்றால் சூழப்பட்டு நிற்கும் தாமரை மலர் அரசி போல் விளங்குவதாக நினைத்தார். சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர் மடத்தகை ஆயம் கை தொழுதாஅங்கு உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல் தாமரைக்கு இறைஞ்சும் தண்துறை.1 அரண்மனையில் அவர் கண்ட காட்சி ஒருவகை உணர்ச்சியை விளைத்தது. ஆம்பல் சூழ்ந்த தாமரையும் அதே உணர்ச்சியை விளைத்தது. ஆகவே அது போன்றது இது என்று இரண்டையும் இயைபுபடுத்திக் கூறினார். இவ்வாறு உணர்ச்சி ஒற்றுமையால் இயைந்து அமைக்கப்படும் கற்பனை இயைபுக் கற்பனை (associative imagination) எனப்படும். கருத்து விளக்கக் கற்பனை உலக வாழ்வில் இறப்பும் பிறப்பும் கேடும் ஆக்கமும் மாறி வருவதைக் கண்டார் புலவர். ஒரு நாள் வானத்தில் திங்களை 1. நற்றிணை, 300 |