Untitled Document 7. வடிவம் கலையும் வடிவமும் கலையின் வடிவம் என்பது, ஒருமுகமாக இயையும் முழுமை எனலாம். இத்தகைய முழுமை பெறாத கலை கலையாகாது. தனிப் பாட்டாக இருப்பினும், ஒரே ஓர் உணர்ச்சியைப் பற்றிய கற்பனையும் ஒலிநயமுமாக இயைந்து அமைதல் வேண்டும். காவியமாக இருப்பினும், ஒரு பெரிய கதையாக அமைந்து நிகழ்ச்சிகள் எல்லாம் அதையே நோக்கி அமைந்தனவாக இருத்தல் வேண்டும். நாடகமாக இருப்பினும் அவ்வாறே அமைந்து ஒரு சுவை மேலோங்க மற்றவை பின்னணியில் நிற்றல் வேண்டும். ஓர் அழகிய கட்டுரையாக இருப்பினும் எங்கெங்கோ வளைந்து செல்லும் கருத்துகளும் ஒரு முடிவை உணர்த்துவதற்குக் கருவிகளாக அமைய வேண்டும். இவ்வாறு அமையும் வடிவத்தில், கொண்ட உணர்ச்சியைப் புலப்படுத்துதற்கு ஏற்ற சொற்களும் அதற்கு இயைந்த நடையும் அமைதல் வேண்டும். வேறுபட்ட உணர்ச்சிகளும் கற்பனைகளும் இடையே வரினும், அவை முதன்மையான உணர்ச்சிக்கு அடங்கி இயைவனவாக இருத்தல் வேண்டும். புலவரின் நடையும் அதற்குத் தக அமைதல் வேண்டும். இவ்வாறு எல்லாம் ஒருமுகமாய் இயங்கி முழுமை பெறுதலே வடிவம் என்று கூறப்படுவதாகும். மற்றக் கலைகளைவிட இலக்கியக் கலைக்கு இது இன்றியமையாததாகும். ஏன் எனில், மற்றவற்றை விட இலக்கியமே, வாழ்வின் பலவகை உணர்ச்சிகளையும் பல்வேறு கற்பனைகளையும் எடுத்துரைத்து விரிந்து நிற்பதாகும். தனிப்பாட்டுகள் சிலவற்றில் ஓர் உணர்ச்சி, ஒரு கற்பனை, ஒருவகை யாப்பு என வடிவம் எளிதில் அமையலாம். ஆயின், பலவகை உணர்ச்சிகள், பல்வேறு கற்பனைகள் பலவகை யாப்பு என அமையும் காவியம் நாடகம் முதலியவற்றில் எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்திப் படைத்தல் எளிது அன்று. புலவரின் அனுபவத்தைச் சொற்களின் அமைப்பு விளக்கிவிடலாம்; ஆயின் | |
|
|