பக்கம் எண் :

152இலக்கியத் திறன்

Untitled Document

அந்த   அனுபவத்தை ஒருமுகப்படுத்தி இயைத்து முழுமையாக்கிக்
காட்டுவது    இலக்கியத்திற்கு   அவர்  தரும் வடிவமே ஆகும்.1
அத்தகைய   வடிவம்   பெற்ற   நல்ல இலக்கியத்தில், மிகையான,
வேண்டாத   உணர்ச்சியோ   கற்பனையோ   இருத்தல்  கூடாது
பொருந்தாத   ஒன்றும்  புகுதல் கூடாது; இது இருந்தால் நன்றாக
இருந்திருக்குமே என்றுபடிப்பவரின் உள்ளம்  உணரக்கூடிய குறை
ஒன்றும்  இருத்தல் கூடாது, இவற்றிற்கு இடம்  தராத இலக்கியமே
நல்ல வடிவம் பெற்றது ஆகும்.2

உள்ளமும் வடிவமும்

     கலையின் வடிவமே, கலைஞரின்  உள்ளத்தையும் கற்பவரின்
உள்ளத்தையும்   தொடர்புபடுத்துவதாகும்.  கலைஞரின் உணர்ச்சி
ஆற்றலுடையதாய்,   பண்பட்டதாய்    விளங்கின்  கலை பெறும்
வடிவிலும்   அந்த   ஆற்றலும்   பண்பாடும்  விளங்கும்.  அந்த
ஆற்றலால்தான்   அவருடைய  உணர்ச்சி கற்பவரின் உள்ளத்தில்
சென்று   பதிய   முடிகின்றது. அந்தப்  பண்பாட்டால்தான், அது
கற்பவரின் உள்ளத்தைப் பண்படுத்த முடிகின்றது.

     ஒருவருடைய   உள்ளத்தின் துயரம் அவருடைய கண்ணீரில்
புலப்பட,   அந்தக்    கண்ணீரைக்     கண்ட   மற்றொருவரின்
உள்ளத்திலும்   அத்துயரம்   ஏற்படுதல்   போலவே, கலைஞரின்
உணர்ச்சி   அனுபவம்   அவர்   படைத்த கலையின் வடிவத்தில்
புலப்பட,   அதைக்   கற்பவரின்  உள்ளத்திலும் அதே அனுபவம்
விளைகிறது.   ஆகவே அனுபவம் ஓர் உள்ளத்திலிருந்து மற்றோர்
உள்ளத்திற்குப் பரவுவதற்குக் கலையின் வடிவம்-பயன்படுகிறது.

     முழுமை    உடையதாகவும்     ஒருமுகமான     இயைபு
உடைய   தாகவும்  விளங்குவதே நல்ல வடிவமாகும். கூறத்தக்கன


     1. That aspect of literature which symbolizes the
substance of originating   experience we may call its
diction; the aspect  which symbolizes the unity of the
substance  in a single act of comprehensive attention
we call the from of a piece of literature.
    - L.Abercrombie, Principles of Literary Criticism p.50

      2. The sum of all the means by which the writer
striyes to convey    his combined thought and emotion
to the reader we may call Literary or.- CT Winchester
Some Principles of Literary Criticism, p.183.