எல்லாம் கூறி முடிந்தன. குறை இல்லை என்ற நிறைவு அளிப்பது முழுமை எனப்படும். கூறிய பகுதிகள் எல்லாம் தொடர்புற்றுச் சிதைவுறாமல் ஒன்றோடொன்று இயைந்து நிற்பதே இயைபு எனப்படும். உள்ளத்தால் உண்மையாக உணர்ந்து எழுதும் எழுத்தில் முழுமையும் இயைபும் ஏற்ப வந்து அமையும். உள்ளத்தில் உண்மையொளி இல்லாதபோதுதான் குறையும் சிதைவும் ஏற்படும். பலர்க்கு உணர்ச்சி அமைந்துள்ள அளவிற்கு, உணர்ச்சிக்கு வடிவம் தரும் ஆற்றல் அமைந்திருப்பதில்லை. உணர்ச்சி மிக்கவர் பலர் உள்ளனர்;உணர்ச்சிக்கு வடிவம் தந்து அதைக் கலையாக்கும் திறமை ஒரு சிலர்க்கே உள்ளது. எல்லோர்க்கும் அந்தத் திறமை இருப்பின், உலகில் கணக்கற்ற காவியங்களும் நாடகங்களும் கதைகளும் தோன்றியிருக்க முடியும். ஓர் இலக்கிய நூல் சிறந்ததா இல்லையா என்பது அதனுள் அமைந்த உணர்ச்சியின் விழுப்பத்தைப் பொறுத்தது. ஓர் இலக்கிய நூல் நன்கு அமைந்தால்,எதுவும் நல்ல கலையாக விளங்க முடியும். விழுமிய உணர்ச்சியாக அமைந்தால், அது சிறந்த கலையாக விளங்க முடியும். பொருளும் வடிவமும்
பாட்டில் பொருளுக்கும் வடிவிற்கும் இயைபு உண்டு; உணர்த்தப்படும் பொருளும் அதை உணர்த்தும் வடிவும் பிரிக்க முடியாதனவாய் இயைந்து நிற்கும்; கற்பனையுணர்ச்சியும் ஒலிநயமாகிய அதன் வடிவமும் ஒன்றுபடும் இயைபே பாட்டாக அமையக் காரணமாக இருப்பது. இந்த உணர்ச்சியை வேறு வடிவில் புலப்படுத்த முடியாது என்று கருதத்தக்க வகையில் அந்த அமைப்பு உளதாகும். அதனால்தான், அறிவு நூல்களை மொழிபெயர்த்துப் பயன்பெறுவது போல், பாட்டு நூல்களை மொழிபெயர்த்துப் பயன்பெற முடியவில்லை. அறிவு நூல்களை மொழிபெயர்ப்பதால் இழப்பது ஒன்றும் இல்லை. பாட்டை மொழிபெயர்ப்பதால் பெறுவது ஒன்றும் இல்லை எனலாம். ஆதலின் பொருளும் வடிவமும் இயைந்து நிற்கும் தன்மையை ஒட்டி-வேறு வடிவில் இதனை உணர்த்த முடியாது |