அவ்வாறு ஆடல்பாடலாய் வெளிப்படுவது இயற்கை. சிறுவரிடத்தில் வெளிப்படையாய், இயற்கையாய்க் காணப்படும் அதுவே, வளர்ந்தவரிடத்தில் குறிப்பாய்ப் புலப்படும். அவர்களின் உடல் முழுவதும் ஆடாவிட்டாலும், வாயில் பிறக்கும் ஒலிகளில்- சொற்களில்-அந்த ஆடலும் பாடலும் புலப்படும்; அதாவது, அவர்கள் எதையாவது பொருளில்லாமல் ஒலிப்பார்கள்; அதில் ஒலிநயம் புலப்படும்; தன்னன தன்னனனா தன்னன தன்னனனா என்று பொருள் இல்லாமல் ஒலிப்பார்கள். அல்லது, பொருளுடன் பேசினாலும் அந்தப் பேச்சில் அமையும் சொற்களிலே ஒருவகை ஒழுங்கு அமைந்து ஒலிநயம் புலப்படும். ஒலிநயம் ஒலிநயம் (rhythm) கேட்பவரின் செவி வாயிலாக அவருடைய உடல் நரம்புகளை இயக்குவது. எங்கோ கேட்கும். பறையொலியின் தாளத்தைக் கேட்டு இங்கு உள்ள சிறுவன் துள்ளியாடுதல் போல், பாட்டின் ஒலிநயத்தைக் கேட்டு நம் உடல் அதன் வயப்படும்; நரம்புகளும் தசைநார்களும் அதற்கு ஏற்ப மெல்ல அசையும். ஒலிநயத்திற்குப் புலன்களை உள்முகமாகத் திருப்பிவிடும் ஆற்றல் உண்டு. கண் செவி முதலானவை வெளியுலகத்துப் பொருள்களில் ஈடுபடாதவாறு இந்த ஒலிநயம் அவற்றின் செயலை ஒடுக்கி உணர்ச்சிகளை உடம்பின் அளவில் அமைத்து நிறுத்திவிடும். அந்நிலையில் உறங்குவது போன்ற அனுபவம் - அறிதுயில் அனுபவம் - ஏற்படும். உறக்கத்தில் புலன்களின் இயக்கம் நின்றுவிடுகிறது; உணர்ச்சிகள் எல்லாம் உடலின் அளவில் அமைந்திடுகின்றன. இதயத் துடிப்பு உள்ளது; இரத்த ஓட்டம் உள்ளது; மூச்சின் இயக்கம் உள்ளது; அவைகள் எல்லாம் ஒழுங்காக இயங்குகின்றன; அவைகள் ஒலிநயம் போலவே ஒழுங்காக இயங்குகின்றன; உறக்கத்தில் பெறும் இத்தகைய அனுபவமே பாட்டின் ஒலிநயத்திலும் பெறப்படுகின்றது. உறங்குவோர் வெளியுலகத்திலிருந்து ஒதுங்கித் தனியே ஓர் அமைதியினுள் இயங்குவதுபோல், பாட்டைப் படிப்பவரும் புலன்களின் வெளியுலக இயக்கத்திலிருந்து தப்பி ஒதுங்கிக் கற்பனையுலகினுள் இயங்குகின்றனர். அங்கே உடம்பின இயற்கையுணர்வுகளும் அடிமனத்தின் உணர்ச்சிகளும் மட்டுமே வாழ்வுக்கு உரியனவாகச் சிறந்து நிற்கின்றன. அவைகளே உண்மையான வாழ்வின் பகுதிகளாக நிற்கின்றன. |