பக்கம் எண் :

வடிவம் 159

Untitled Document

உண்மையுலகம்   போலவே  அவற்றை  எல்லாம்  நம்பி உள்ளம்
மயங்கி   உணர்ச்சி   வயப்படுகிறது.   போலவே,  பாட்டின் ஒலி
நயமும்   உள்ளத்தை    மயக்கிக்  கற்பனையுலகத்திற்கு ஈர்த்துச்
செல்வதாகும். செவி அந்த ஒலிநயத்தை உணர்ந்தவுடனே, உள்ளம்
கற்பனையை உணர்ந்து பாட்டின் உணர்ச்சியைப் பெற முனைகிறது.

      தாயின்  தாலாட்டைக் கேட்டவுடன், அல்லது தொட்டிலின்
ஒழுங்கான   அசைவை  அறிந்தவுடன், அல்லது தாயின் கை தன்
முதுகை மெல்லத் தட்டும் ஒழுங்கை  உணர்ந்தவுடன் குழந்தையின்
மனம் உறக்கத்தில்  ஈடுபடத் தொடங்குகிறது. அதுபோல் பாட்டின்
ஒலிநயத்தைக்   கேட்டவுடன்,   படிப்பவரின்  மனம் அறிவையும்
ஆராய்ச்சியையும்    கைவிட்டு  உணர்ச்சியையும் கற்பனையையும்
நாடத் தொடங்கல்   வேண்டும்.   நனவுலகத்தை விட்டு வேறோர்
உலகத்தில்.   கற்பனையுலகத்தில்   நடக்கத்    தொடங்குகிறோம்
என்பதை ஒலிநயம் நினைவூட்டுவதாக அமைகிறது.1

      குழந்தை தாலாட்டைக்  கேட்டு உறங்கத் தொடங்குவதற்கு
மாறாக,   சிலநாட்களில்   உறக்கம் வந்ததும் குழந்தையின் மனம்
தாலாட்டை   நாடும்;   தொட்டில்   அசைய   வேண்டும் என்று
விரும்பும்;   தாயின்  கை தன் முதுகைத் தட்ட வேண்டும் என்று
விழையும்.   அதுபோல், படிப்பவரின் மனம் அறிவுலகத்திலிருந்து
உணர்ச்சியுலகத்தை    ட்டும் போது, உடனே அதற்கு ஏற்றதாகிய
ஒலிநயத்தை நாடும்.

உணர்ச்சியும் ஒலிநயமும்

     உரைநடையும்   பாட்டும்   கலந்த   கட்டுரையை அல்லது
நூலைப்   படிக்கும்போது   இத்தகைய அனுபவத்தைக் காணலாம்.
வாய்விட்டுப்  படிக்காமல்   மனதிற்குள்ளேயே   உரைநடையைப்
படித்துக்   கொண்டிருப்பவர்,  இடையே  ஒரு பாட்டு வந்தவுடன்,
அதன்   உணர்ச்சி   உள்ளத்தில்  வரப் பெற்றதும், வாய் திறந்து
பாட்டைப்  படிக்கத்  தொடங்குவது வழக்கம். உணர்ச்சி தனக்குத்
துணையாக ஒலிநயத்தை நாடுவதையே இது காட்டுகிறது.


      1. It (rhythm)   serves notice that we are on the
frontiers of illusion...That is, the expectation with which
wr   approach   poetry   is utterly  different from the
expectation with which we approach prose.
    - J.L.Lowes, Convention and Revolt in Poetry, p.30