பக்கம் எண் :

160இலக்கியத் திறன்

Untitled Document

      கிராமங்களில்    பலமுறை   கேட்டுப்   பழகிய  பாரதம்
இராமாயணம்   முதலிய    கதைகளைப்   படிப்பவர்  உணர்ச்சி
இல்லாமல்   படிக்க முடியாத காரணத்தால், அவை உரைநடையில்
அமைந்திருந்த   போதிலும்,   அந்த  உரைநடைக் கதைகளையும
பாட்டுப்போல்   இசையோடு நீட்டிப் படிப்பது வழக்கம். குழந்தை
தாலாட்டை  விரும்பி நாடுவது போல், உணர்ச்சிமிக்க அவர்களின்
உள்ளம்   கதையின்   கற்பனையில் நுழைந்தவுடன், ஒலிநயத்தை
நாடுவதால்     தான்,  அவ்வாறு   இசையோடு   நீட்டிப்படிக்க
விரும்புகின்றனர்.

       பாட்டும்   கற்பனை   மிகுந்த   கதையும் படிக்கும்போது
ஒலிநயம்   துணைக்கு வருவதைக் கண்டோம். பாட்டும் இல்லாமல்
கதையும்     இல்லாமல்   உணர்ச்சி மட்டும் வரும்போதெல்லாம்
ஒலிநயம் உடன் அமைவதை வாழ்க்கையில் காணலாம். சிரிப்பிலும்
அழுகையிலும்    ஒலிநயம்   இருப்பது   எல்லோரும்   அறிந்த
உண்மையாகும்.         குழந்தையாயினும்      முதியவராயினும்,
ஒலியுண்டாகச்   சிரித்தாலும்,  அழுதாலும் அந்த ஒலியில் அதைக்
காணலாம்.   பெருமகிழ்ச்சியோடு   சில  சொற்கள் பேசும்போதும்,
அல்லது   பெருந் துயரத்தோடு   சில   சொற்கள் பேசும்போதும்,
நம்மை   அறியாமலே   அந்தப்   பேச்சில் ஒலிநயம் அமைகிறது.
சினம்   மிகுந்த    அந்தப்  பேச்சிலும் அதைக் காணலாம். எந்த
உணர்ச்சியும் உடம்பின் அசைவாகவோ, பொருளற்ற ஒலியாகவோ
பொருளுடைய சொற்களாகவோ புலப்படும்போதெல்லாம் ஒலிநயம்
இல்லாமல்    புலப்படுவதில்லை. இயற்கையாகவே உணர்ச்சியோடு
இயைந்தது ஒலிநயம் என்பதை இவை விளக்குகின்றன.1

    ஆகவே,  உணர்ச்சியை உயிராக உடைய பாட்டுக்கு ஒலிநயம்
எவ்வளவு    இன்றியமையாதது   என்பது   விளங்கும்.  பாட்டில்
புலவரால்     அமைக்கப்பட்ட    உணர்ச்சியைப்   படிப்பவர்க்கு
உய்ப்பது   ஒலிநயமே   ஆகும்.  வெறுஞ் சொற்கள் கருத்துகளை
மட்டுமே   விளக்க   வல்லன.   புலவரின் உணர்ச்சி யனுபவத்தை
விளக்கும்   ஆற்றல்  அந்தச்   சொற்களுக்கு இல்லை. அத்தகைய


     1. The language  of elevated thought or feeling is
always rhythmic. Strong  feeling of whatever sort, that
is, imposes upon speech  a rhythmie beat. - J.L.Lowes. Convention and Revolt in Poetry. p.149.