பக்கம் எண் :

வடிவம் 161

Untitled Document

சொற்களின்  வாயிலாக உணர்ச்சி புலப்படும்போது ஒலிநயம் வந்து
உதவுகிறது.   ஒலிநயம்   இல்லாமல் புலவரின் உணர்ச்சியனுபவம்
பாட்டின்  சொற்களில்  வாழ  வழி இல்லை.1 ஒலிநயத்தின் துணை
இல்லாமல்  சொற்களை   மட்டும்  கொண்டு   படிப்பவர்  அந்த
உணர்ச்சியனுபவத்தைப் பெறுவதற்கு இயலாது.

ஒலிநயத்தின் சிறப்பு

     சொற்களை   ஏட்டில்   காணும்போது,   அல்லது  ஏட்டில்
உள்ளவாறு - நிறுத்திப்    படிக்கும்போது,    அல்லது   ஏட்டில்
உள்ளதைப் - படிப்பது   போல்  உணர்ச்சியின்றிப் பேசும் போது,
அவை கருத்துக்களை   மட்டுமே  காட்டுகின்றன, உணர்ச்சியையும்
புலப்படுத்த   வேண்டுமானால்,   அந்தச்   சொற்களால்  மட்டும்
முடியாது.   உணர்ச்சிக்கு   ஏற்ற   முகக்   குறிப்புகள் கொண்டு,
கைகளின்   அசைவுகளையும்   சேர்த்தால், அந்தச் சொற்களுக்கு
உணர்ச்சியும்   சேர்ந்து   அமைகிறது.  குரலொலியை  எடுத்தும்
படுத்தும்     வன்மையாக்கியும்   மென்மையாக்கியும்   நீட்டியும்
குறுக்கியும்   மாற்றி   உணர்ச்சியைப்  புலப்படுத்தலும்   உண்டு.
இவையெல்லாம்   பேச்சில் இயலும்.   ஆனால்  பாட்டில் என்ன
செய்வது?பாட்டை இயற்றிய ஆசிரியர் எங்கோ உள்ளார்.(அல்லது
என்றோ இருந்தார்).  அவர்  தம்முடைய முகக்குறிப்புக்களையோ
கையசைவுகளையோ     பாட்டோடு   விட்டுச்   செல்லவில்லை;
அவ்வாறு விட்டுச்செல்லல் இயலாத ஒன்று. ஆகவே, அவருடைய
உணர்ச்சியை   அந்தப்   பாட்டின்  சொற்கள் உணர்த்தவில்லை.
அந்தக் குறையைப்போக்கவே, ஒலிநயம் பயன்படுகிறது.அந்த ஒலி
நயத்தில் புலவர் உற்ற  உணர்ச்சி இல்லை; ஆயின் அதன் சாயல்
படிந்துள்ளது எனலாம்.  அதைக்  கொண்டு பாட்டைப் படிப்பவர்,
புலவருடைய   உணர்ச்சியைப்  பெற முயலல் வேண்டும். முயற்சி
நெறியோடு அமைந்தால்,  விரும்பிய  பயனைத் தருகிறது இதற்கு
வேறு சான்று   வேண்டா.   தலைமுறை   தலைமுறையாக  ஒரு
காவியத்தைப் படித்து, அனைவரும் ஒரே வகையான உணர்ச்சியை
வழி வழியாகப் பெற்று வருதலே போதிய சான்றாகும்.


      1. Rhythm is, no doubt, the most valuable use in
literary art of the sound of words; since for the most
part it is rhythm which conveys the emotional atmos-
phere, which experience could not live.
- L. Abercrombie, principles of Literary Criticism p. 42.