கார் காலத்தில் திரும்பி வருவதாகக் கூறித் தலைவன் பிரிந்து சென்றான். கார் காலம் வந்துவிட்டது. தலைவன் வரவில்லை. அந்நிலையில் தலைவி நினைந்து ஏங்குகின்றாள். "முல்லை அரும்புகள் முற்றிவிட்டன. காடுகள் கார்காலத்து அழகை நிரம்பப் பெற்றுவிட்டன. நம் அணிகலன் நெகிழுமாறு பிரிந்தவர் இன்னும் வரவில்லை ஆனால் என் சிறந்த அழகையெல்லாம் அழிக்கவல்ல மாலைக்காலம் வந்து விட்டது." என்கிறாள். இவ்வாறு உரைநடையில் படிக்கும்போது கருத்தை உணர முடிகின்றதே அல்லாமல், தலைவியின் உள்ளத்து உயர்ச்சியை உணர முடியவில்லை. முகைமுற் றினவே முல்லை: முல்லையொடு தகைமுற் றினவே தண்கார் வியன்புனம் வாலிழை நெகிழ்த்தோர் வாரார் மாலை வந்தன்றென் மாண்நலம் குறித்தே* என்று பாட்டைச் சிலமுறை படித்தால், உணர்ச்சியை ஒருவாறு பெற முடிகின்றது. இப்பாட்டில் வியன்புனம், வாலிழை, வந்தன்று முதலிய அருஞ்சொற்கள்-இன்றைய தமிழ் வழக்கில் இல்லாத சில சொற்கள் - உள்ளமையால் அந்த உணர்ச்சியை எளிதில் பெற முடியவில்லை. இதே உணர்ச்சியை ஒலி நயம் குறைந்த ஆசிரியப்பா வில் அமைக்காமல், ஒலிநயம் மிகுந்த விருத்தப்பாவில் வழக்கில் உள்ள எளிய சொற்களில் அமைத்தால் உணர்ச்சியை நன்கு பெற முடிகின்றது. மங்கையர்கண் புனல்பொழிய மழைபொழியும் காலம் மாரவேள் சிலைகுனிக்க மயில்குனிக்கும் காலம் கொங்கைகளும் கொன்றைகளும் பொன்சொரியும் காலம் * குறுந்தொகை, 188 |