| கோகனகக் கொடிமுல்லை முகைநகைக்கும் காலம் அங்குயிரும் இங்குடலும் ஆனதொரு காலம் அவரொருவர் நாமொருவர் ஆனகொடுங் காலம்* இது, வெள்ளிக் கிண்ணத்தில் இருந்த தேனைப் பொற் கிண்ணத்தில் பெய்து வைத்தாற்போல் உள்ளது. உணர்ச்சி ஒரு தன்மையதாக இருப்பினும், அதைப் புலப்படுத்தும் பாட்டின் ஒலிநயம் இன்பம் மிக்கதாக உள்ளது. அதனால் பழங்காலப் புலவர்கள் உணர்ச்சி மிக்க காதல் பாட்டுகள் கலிப்பாவாகவும் பரிபாட்டாகவும் அமைதல் வேண்டும் எனக் கருதினார்1 "பா என்பது சேட்புலத் திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடம் ஓதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்வதற்கு ஏதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை" என்பார் பேராசிரியர்2.அதனால், பழங்காலத்திலேயே, பாட்டுக்கு ஓசைநயம் எவ்வளவு இன்றியமையாதது என்பதைத் தமிழர் உணர்ந்து போற்றினமை விளங்கும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆகிய நான்கு பாக்களின் ஓசைக்கும் செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை எனத் தனித் தனியே பெயர் தந்து போற்றிய சிறப்பாலும் செப்பலோசை முதலியவற்றுள் ஒவ்வொன்றினையும் மும்மூன்றாகப் பிரித்துணர்ந்த நுட்பத்தாலும் இது தெளிவாகும். இந்த ஓசையின் நயத்தை வண்ணம் என்ற பெயரால் குறிப்பிட்டு, இருபது வண்ணங்களாகத் தொல்காப்பியனார் பாகுபாடு செய்திருத்தலும் இங்குப் போற்றத்தகும். பிற்காலத்தார் நூறு வண்ணங்களாகப் பாகுபாடுசெய்தனர். * நந்திக் கலம்பகம் 1. கலியே பரிபாட் டாயிரு பாங்கினும் உரிய தாகும் என்மனார் புலவர் - தொல்காப்பியம், அகத்திணையில்,53 2. தொல்காப்பியம், செய்யுளியல், 1. பேராசிரியர் உரை. |