என்று ஒரு பகுதி முடிந்தவுடன் மனம் மறுபடியும் அதையே எதிர்பார்க்கிறது. இதந்தரு மனையின் நீங்கி (தனதன தனன தான) இடர்மிகு சிறைப்பட்டாலும் (தனதன தனன தான) என எதிர்பார்த்தவாறு வருமாயின், மனம் ஒலிநயத்தால் மகிழ்கிறது. இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும் விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட் டாலும் பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந் திழிவுற் றாலும் சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கி லேனே எனப் பாட்டு முழுதும் அதே ஒலியமைப்புத் திரும்பத் திரும்ப வரும்போது, மனத்திற்கு மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. பாட்டில் ஏற்பட்ட உணர்ச்சி சிதறாமல் காக்கவும் படுகிறது. தொடர்ந்து இன்னும் சில பாட்டுகள் அவ்வாறான ஒலியமைப்பே திரும்பத் திரும்ப அமைந்து வரும்போது, உணர்ச்சி நிலைபெறப் பதிந்து உருவாகி விடுகிறது. இதை உணர்ந்த முன்னோர்கள் இத்தகைய அடிகளில் உள்ள ஒலிகளைப் பகுத்துச் சீர்கள் என்றும் அசைகள் என்றும் கண்டு யாப்பு வகுத்தனர். கருவிளம் புளிமா தேமா கருவிளம் புளிமா தேமா கருவிளம் தேமா தேமா கருவிளம் புளிமா தேமா கருவிளம் புளிமா தேமா கருவிளம் புளிமா தேமா கருவிளம் தேமா தேமா கருவிளம் புளிமா தேமா
|