கற்பனையுலகத்தில் அறிதுயில் கொள்வதற்கு யாப்பு உதவி புரிகிறது ஒரு கருத்தை உரைநடையில் எழுதிப் படிக்கலாம்; மனம் ஒரு நொடியில் அறிந்துகொண்டு அப்பால் செல்ல முயலும் அதே கருத்தைச் சீரும் அடியுமாக யாப்பில் அமைத்துப் படிக்கலாம்; மனம் மெல்ல உணர விரும்புவதோடு திரும்ப அதைக் கேட்க விரும்பும். உணர்ச்சியோடு கூடிய பாட்டாக இருந்தால், இந்த வேறுபாடு இன்னும் தெளிவாகப் புலப்படும். திரும்பத்திரும்ப எதிர்பார்க்குமாறு வரும் இந்த ஒலியமைப்பு முறை யாப்பில் உள்ளதைவிட மிகுதியாக இசையில் உள்ளது.1 இசையில் திரும்பத் திரும்ப வரும் ஒலியமைப்புகளை எடுத்துக்காட்டும் முறையில் தாளம் அமைந்திருத்தலைக் கேட்டு உணரலாம். இவ்வகையில் யாப்பு ஓர் ஆறு என்றால், இசை கடல் எனலாம். யாப்பின் அடிப்படையாக உள்ள ஒலிநயத்தையே பலவகையாய்ப் பெருக்கி முழுமையுறச் செய்துள்ள கலை இசைக் கலையாகும். அதனால்தான், இசையின் ஒலிநயத்தில், கேட்பவரின் உள்ளம் பெயராமல் ஒன்றிவிடுகிறது. நடன இசைக் கலைகளின் தொடர்பு நடனக்கலை, இசைக்கலையோடு தொடர்பு உடையது. யாப்பு என்னும் இந்த ஒலியமைப்புமுறையை நடனக்கலையோடு தொடர்பு படுத்தி முன்னோர் உணர்ந்திருந்தனர். அசை, சீர் தளை, அடி, தொடை என்னும் யாப்பின் உறுப்புகளின் பெயர்கள், பாட்டுக்கும் ஆடற்கலைக்கும் இருந்த பழைய உறவைத் தெரிவிக்கும் சொற்கள். சீர் என்பது தாளத்தைக் குறிக்கும். தளை என்பது தாளப் பொருத் தத்தைக் குறிக்கும். அடி என்பது அடி எடுத்து வைத்து ஆடும் ‘பதம்’என்பதைக் குறிப்பதாகும்.தொடை என்பது அதற்கு இயையக் கை முதலியவற்றைத் தொடுத்து இயக்குவதைக் குறிக்கும்.2 1. Music is the most complete and complex kind of metre. - C.T.Winchester Some Principles of Literary Criticism, p.237 2. ஆங்கிலத்தில் கவிதையின் வகைகளுள் ஒன்றாகிய பாலட் - ballad - என்பது தொடக்கத்தில் நடனத்தோடு தொடர்புடையது என்றும், நடனம் என்னும் பொருளுடைய பிரெஞ்சு மொழிச் சொல்லினின்றே, அப்பெயர் அமைந்தது என்றும் கூறுவர். - P.H.B.Lyon, The Discovery of Poetry, p.34 |