| "தொடக்கத்தில் ஆடல் நிகழ்ந்தபோது ஒலியும் கலந்து நிகழ்ந்தது. ஒலி இல்லாமல் அழவும் சிரிக்கவும் முடியாத குழந்தைபோலவே மனிதன் இருந்தான். இன்றும் பொரும்பாலும் ஒலியின் துணை இல்லாமல் கூத்துக் கலை நிகழ்வதில்லை. அந்த ஒலியே இசை எனப்பட்டது. இவ்வாறு ஒன்றாகப் பிறந்து வளர்ந்த கூத்து இசை என்னும் இரு கலைகளில் கூத்து என்னும் கலை தனித்து வாழமுடியவில்லை. ஆனால் இசை தனித்து வாழவும் வளரவும் முடிந்தது... இசையில் கலந்து நின்ற இருவகை ஒலிகளுள் பொருளொலிகள் என்பவை சொற்கள் பல அமைந்த அமைப்பாகும். அவற்றை மனிதனுடைய குரல் மட்டுமே தெளிவாக இசைக்க முடியும். ஆனால் பொருளற்ற உணர்ச்சியொலிகளைப் பொறுத்த வரையில், அவனுடைய குரலைவிட யாழ் குழல் முதலிய இசைக்கருவிகள் சிறப்புற இசைக்க முடியும். ஆகவே, மனிதன் இசைக்கருவிகளைக் கண்டு பிடித்து அவற்றை விடாமல் பயன்படுத்த தொடங்கினான்... பொருளொலிகளை மிகுதியாக இசைத்துப் பயின்ற போது, செவிப்புலன் வாயிலாக மட்டும் அல்லாமல் அறிவின் வாயிலாகவும் உள்ளம் குழைந்து இன்புற்றான். இன்னும் கூறப் புகுந்தால், செவிப்புலன் வாயிலாகப் பெறும் இன்பம் குறைந்து அறிவின் வாயிலாகப் பெறும் இன்பம் மிகுந்தது எனலாம். இந்த நிலையில் பாட்டு என்னும் கலை, உணர்ச்சி யொலிகளின் துணையையும் கடந்து இசைக் கருவிகளின் துணையையும் கடந்து வாழ வல்லதாய் விளங்கலாயிற்று....ஆடற் கலையிலிருந்து இசை தனியே பிரிந்து வளர்ந்ததுபோல், இசைக் கலையிலிருந்து பாட்டும் தனியே பிரிந்து வளரத் தலைப்பட்டது ஆனால்,ஆடற்கலையிலிருந்து இசை முழு விடுதலை பெற்று வளர முடிந்தது போல் இசைக் கலையிலிருந்து பாட்டு முழு விடுதலை பெறமுடியவில்லை. ஓரளவே விடுதலை பெற்றது" என்னும் கருத்துகள் இங்கு உணரத்தக்கவை.1 உணர்ச்சிக்கு ஏற்ற யாப்பு யாப்புக்கும் உணர்ச்சிக்கும் உள்ள தொடர்பைப் பல பாட்டுகளைக் கற்று உணரலாம். வேகமான யாப்பும் அதற்கு ஏற்ற சொற்களும ்அமைந்த பாட்டில், அதற்கு உரிய உணர்ச்சியும் அமையாதிருக்குமானால், பொருத்தமின்மை உடனே புலப்படும். 1. மு.வ. இலக்கிய ஆராய்ச்சி, ப.112-115. |