| இருளில் கடைசிப் படியை மேல்படி என்று தவறாக உணர்ந்து அங்கிருந்து தாவிக் குதித்தால் தரை தட்டுப்பட்டு வருவது போன்ற உணர்ச்சியே அத்தகைய பாட்டில் ஏற்படும் எனலாம். எதிர்பார்த்தது வேகமான உணர்ச்சி ஆகையால் அத்தகைய ஏமாற்றம் ஏற்படும். ஆதலின் பாட்டின் யாப்பு, உணர்ச்சிக்கு ஏற்றதாக அமைதலே சிறப்பாகும். நாரியர் இல்லைஇஞ் ஞாலம் ஏழும் என்னக் கூரிய வாள்கொடு கொன்று நீக்கி யானும் பூரியர் எண்ணிடை வீழ்வன் என்று பொங்கும் வீரியர் வீரம்வி ழுங்கி நின்ற வேலான்.1 இது தசரதன் கைகேயியின் மேல் கொண்ட சினம் பற்றிய பாட்டு. கூவிளம் கூவிளம் தேமா தேமா தேமா எனச் சிறு சிறு சீர்கள் விளச்சீரும் மாச் சீருமாய் அடுக்கிச் சினத்தால் தெரிக்கும் சொற்களின் கடுமை விளங்குமாறு யாப்பு அமைந்ததைக் காணலாம். கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேனென் உண்ணேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ பெண்ணே வண்மைக் கைகயன் மானே பெறுவாயேல் மண்ணே கொள்நீ மற்றைய தொன்றும் மறஎன்றான்.2 இது தசரதன் சினம் தனிந்து மனம் நொந்து கைகேயியிடம் பணிந்து இரத்தல் பற்றிய பாட்டு. தேமா தேமா கூவிளம் தேமா புளிமாங்காய் எனச் சீர்கள் சிறியனவும் பெரியனவுமாய் மாறி அமைந்து. ஒவ்வொரடியின் ஈற்றிலும் புளிமாங்காய்ச் சீர் நெடிது இரந்து கேட்கும் குறிப்பைப் புலப்படுத்துவதாய் இருத்தலைக் காணலாம். 1. கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், கைகேசி சூழ்வினைப் படலம், 22 2. ஷெ 28 |