அவற்றை ஆராய்ந்து விளக்குவது அறிவியல். மண்ணே ஆயினும், கல்லே ஆயினும், அவற்றில் மனம் பற்றிநின்று (ஈடுபட்டு) உணர்ந்து கூறுவது கலை. அதனால்தான் உடலியல் (Physiology) உளவியல் (Psychology) என்பனவும் அறிவியலில் சேர்கின்றன. நிலவையும் விண்மீன்களையும் தீட்டும் ஓவியங்களும் பாடும் பாடல்களும் கலை ஆகின்றன. அறிவியலில், ஒன்றை விளக்குவதற்கு உரிய சொற்களும் அறிகுறிகளும் முழுமையும் தேவையாகும். சொற்களும் அறிகுறிகளும் குறைந்தால் விளக்கம் குன்றும். கலையில், ஒரு பகுதியை உணர்த்த முயன்றால் போதும்; கற்பனையின் ஆற்றலால், முழுதும் தானே விளங்கிவிடும். அறிவியல் எல்லாப் பகுதிகளையும் விளக்கினால்தான் தெளிவு பிறக்கும்; கலையில் எல்லாப் பகுதிகளையும் விளக்கினால் சுவை குன்றும். அறிவியலில் ஓர் உண்மையை விளக்க அமைந்ததற்கு (கட்டுரை, கணக்கு முதலியவற்றிற்கு) வடிவம் உண்டு. உண்மை விளங்கிய பிறகு அந்த வடிவம் தேவையற்றுப் போகின்றது. கலையிலோ, உணர்த்தப்படும் அனுபவமும் அதற்கு அமைந்த வடிவமும் பிரிக்க முடியாதவை. உரிய வடிவம் இல்லாதபோது அந்த அனுபவம் இல்லையாகின்றது. அறிவியல் துறையில் உழைத்த அறிஞரையும் அவர் அறிவித்த உண்மைகளையும் பிரித்தறிய முடியும். கலைத்துறையில் கற்பனை செய்த கலைஞரையும் அவருடைய கற்பனையனுபவங் களையும் பிரித்துணர முடியாது. ஆராய்ந்து அறிவித்த உண்மை களில் அறிஞர் இல்லை. ஆயின், கலையில் கற்பனைகளில் கலைஞரின் அனுபவங்கள் பிரிக்க முடியாமல் ஒன்றுபட்டிருக் கின்றன. அறிவியல் பெரும்பாலும் வேறொரு பயனை விளைத்து அதனால் இன்பம் தரும், கலை, தானே இன்பம் தரும்; அதன் பிறகு வேறு பயன் விளையச் செய்தலும் உண்டு. ஒரு முறை ஆராய்ந்து அறிந்த பிறகு, மீண்டும் அதையே அறிவதில் ஆர்வம் இல்லாமற் செய்வது அறிவியல். ஒரு முறை உணர்ந்ததையே திரும்பத் திரும்ப உணர்ந்து இன்புறுமாறு தூண்டுவது , உணர உணர இன்பம் பெருகச் செய்வது கைல. |