பக்கம் எண் :

18இலக்கியத் திறன்

Untitled Document

     அறிவு   பெருகப்  பெருக,  மனம் வளர்ந்த  வளர்ச்சியை,
நினைவூட்டுவது  அறிவியல். கற்பனையுணர்ச்சி  பெருகப் பெருக,
மனம் குழந்தைத் தன்மை பெற்று என்றும் இளமையுறச் செய்வது
கலை.

     அறிவியல் (Science) பொருள்களை அவற்றில்  தன்மைக்கு
ஏற்பக்    காணச்   செய்கிறது.  கலையோ, அப்பொருள்கள் நம்
உள்ளத்தே   எழுப்பும்   அழகுணர்ச்சியைக்  கொண்டு  காணச்
செய்கிறது. பொருள்களின் அழகு நம்மால் பொதுவாக எப்போதும்
உணரப்படுகிறது. ஆயினும்   அது  முழு உணர்வு அன்று; அரை
குறையாக ஒரு சிறு   பகுதியே   உணரப்படுகிறது.    ஒவ்வொரு
வேளையில், நாம்  எதிர்பாராத நிலையில், ஒரு பொருளின் அழகு
முழுமையும்   உணர்ந்து   வியந்து   நிற்கிறோம். அதுவே கலை
உணர்த்துவது.   அறிவியலோ நம் முயற்சிக்கு ஏற்பப் படிப்படியே
விளக்கம் தருவதாகும்.

     அறிவியலால்   பெறும்   அறிவு  மூளையின் ஒரு பகுதிக்கு
விருந்தாகிறது;   பயின்ற   பிறகு   அதன்  புதுமைத் தன்மையை
இழந்துவிடுகிறது.     ஆயின்,     கலையுணர்ச்சியால்    பெறும்
அனுபவமோ   மனிதனின்   உணர்வு முழுமைக்கும் விருந்தாகிறது;
என்றும் அதன் புதுமைத் தன்மை நீங்குவதில்லை.

முழு வாழ்வு

     இத்தனை    வேறுபாடுகளையும்   உணர்ந்து  அறிவியலின்
பயனையும்    கலையின்   பயனையும்  பெற வல்லவர்களே முழு
வாழ்வு வாழ    வல்லவர்கள் ஆவர். ஏன் எனில், மனித வாழ்வில்
அறிவின் பங்கும்    உண்டு; உணர்ச்சியின் பங்கும் உண்டு. அறிவு
கொழுத்தி உணர்ச்சி   குன்றியவர்கள் மரம் போன்றவர்கள்; அறிவு
குன்றி உணர்ச்சி மிகுந்தவர்கள்   விலங்கு போன்றவர்கள். அறிவும்
உணர்ச்சியும் ஒழுங்காக  வளர்ந்து பண்பட்டவர்களே சீரான மனித
வாழ்வு பெற்றவர்கள் எனலாம்.

       அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
      மக்கட்பண்பு இல்லா தவர்.
      விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
      கற்றாரோ டேனை யவர்.
      சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
      நன்றின்பால் உய்ப்ப தறிவு.