| ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீந் தனையே.* இது உளம் கனிந்து வாழ்த்திப் பாடிய பாட்டாகும். இப்பாட்டுகளில் உணர்ச்சி பெரிதும் வேறுபடினும்,அவ்வேறு பாட்டை யாப்பு நன்கு புலப்படுத்த இயலாமை காணலாம். ஒரு சிலர் வெற்றி பெற்றுள்ளனர் என்பதும் உண்மையே, ஆயினும் அவர்தம் திறன்,சிறிய அரங்கத்தினுள் இருந்து பலவகை ஆடலை ஆடிக் காட்டுவது போன்றதாகும்; ஓரிரு வண்ணங்கள கொண்டே ஒரு பெருஞ்சோலையைத் தீட்டிக் காட்டுவது போன்ற தாகும். பிற்காலத்தில் தாழிசை துறை விருத்தம் எனப்பாவினங்கள் வளர்ந்த பிறகு இடர்ப்பாடு நீங்கியது. சிறப்பாக,விருத்தம் வளர்ச்சி பெற்ற பிறகு, அது நூற்றுக்கணக்கான ஓசை வேறுபாடுகளை உணர்த்த வல்லதாய்ப் பெருகி வளர்ந்த பிறகு, ஆடவல்லவர்க்குப் பெரிய அரங்கு கிடைத்தாற்போல் ஆயிற்று: சோலையில் உள்ள பல நிறப் பூக்களையும் சில நிறப் பழங்களையும் தீட்டுவதற்கு உதவுமாறு பலவகை வண்ணங்கள் கிடைத்தாற்போல் ஆயிற்று. கலிவிருத்தம் ஒன்றிலேயே, சீர்களைச் சில வேறு தளையாக மாற்றியமைத்துப் பல வேறு ஓசைகளைப் படைத்தல் முடிந்தது; இவ்வாறே கலித்துறை, அறு சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் முதலியவற்றிலும் சீர்களைப் பலவாறு வேறுபடுத்தி அமைப்பதன் வாயிலாகப் பலப்பல ஓசை வேறுபாடுகளைப் படைத்தல் முடிந்தது. ஆகவே புலவர் தம் உணர்ச்சிகளுக்கும் தம் கற்பனை மாந்தர் களின் உணர்ச்சிகளுக்கும் ஏற்றவாறு பல வகை விருத்தங்களைப் பயன்படுத்தல் முடிந்தது. இது பிற்காலத்தில் புலவர்க்குக் கிடைத்த பெரு வாய்ப்பாகும். எதுகை ஒலிநயம் (rythm) வேறு; எதுகை மோனை முதலியன வேறு. உணர்ச்சி மிகும் போதெல்லாம், அதற்கேற்றவாறு ஒலிநயம் அமையும். அது தானாகவே வந்தமையும்; எதுகை மோனை முதலி யன தாமே வந்தமைதல் குறைவு; செய்யுள் இயற்றுவோர் விரும்பி அமைத்தலே மிகுதி. * புறநானூறு, 91 |