| மாதரனு மாதரனு மாதரனு மாதரன்1 என்பவை நான்கடியும் மடக்கிய மடக்கு என்றும், ஒரு சொல்லானே நான்கடியும் மடக்கிய இயமாவியமகம் என்றும் கொண்டனர். காதலி பிரிவாற்றாமையின் போது நிலவைப் பழிப்பதாக ஒரு பாட்டு உள்ளது. அந்தப் பாட்டை படிக்கும் போது, காதலியின் துயர உணர்ச்சி தோன்றாமல், புலவர் காய் என்ற சொல்லைப் பல முறை ஆண்டு, பல காய்களை ஒரு வெண்பாவில் அமைத்த திறமை பற்றிய வியப்பே தோன்றுகிறது. இசைக்கலையைப் போற்ற இசையரங்கிற்குச் சென்றபோது, அங்கே முழவு ஒலிப்பவரின் கைத்திறனையும் தலையசைவையும் போற்றித் திரும்புதல் போன்ற நிலையே ஏற்படுகிறது எனலாம். அப் பாட்டு வருமாறு:- அத்திக்காய் காய்காய்காய் ஆலங்காய் வெண்மதியே இத்திக்காய்க் காய்ந்துனக் கென்னபயன்-சற்றுமென்மேல் பற்றற் றவரைக்காய் பாவைக்காய்க் கோவைக்காய் சொற்றக்காய் தூதுவிளங் காய். பாட்டைப் படிக்கும்போது ஒருவகைத் திறமையைக் கண்டு வியக்கின்றோம். ஆயின் கலையுணர்ச்சி உடையவர் பாட்டினிடம எதிர்ப்பார்ப்பது அது அன்று. வந்த சொல்லே திரும்ப வரல் கூடாது என்பது இங்குக் கருத்து அன்று. வெறுஞ் சொல்விளையாட்டுக்காக அவ்வாறு வருதல் கூடாது; உணர்ச்சியை மிகுவிப்பதற்காக அவ்வாறு வருமாயின் அது போற்றத்தக்கதாகும். வான்கெட்டு மாருத மாய்ந்தழல்நீர் மண்கெடினும் தான்கெட்டல் இன்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு ஊன் கெட்டு உயிர்கெட்டு உணர்வுகெட்டென் உள்ள மும்போய் நான் கெட்ட வா பாடித் தெள்ளேணம் கொட்டோமோ2. 1. ஷெ 2. திருவாசகம், திருத்தெள்ளேணம், 18 |