பக்கம் எண் :

184இலக்கியத் திறன்

Untitled Document

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே*

     இப்பாட்டுகளில்  வந்த சொல்லே திரும்பத் திரும்ப வரினும்,
சொல்வித்தையோ  விளையாட்டோ   இராமல் விழுமிய உணர்ச்சி
மேன்மேலும் சிறந்து விளங்கல் காணலாம்.

     இவ்வாறு அல்லாமல்,   சொல்லணிகள் என்று யமகம் திரிபு
முதலியவற்றைப் போற்றி,   பொருட்சிறப்பையும் உணர்ச்சியையும்
கற்பனையையும் புறக்கணிக்கும் போக்கு, பிற்காலத்தில் ஏற்பட்டது.
அதனைக் கடிந்து அறிஞர் வி.கோ.   சூரியநாராயண சாஸ்திரியார்
என்னும் பரிதிமாற் கலைஞர் பின்வருமாறு எழுதியுள்ளார்:

     "அணிகளுட்  சொல்லணிகளோ   விசேடமாய்   நல்லிசைப்
புலவர்களால்   மதிக்கப்படுவன   அல்ல.   முற்காலத்துச்   சங்க
செய்யுட்களிலெல்லாம்     சொல்லணிகள்    காண்டலரிது.   இச்
சொல்லணிகளினும்   சித்திர   கவிகள்   மிகவும் ஒதுக்கப்படுவன
ஆயின.  காஞ்சிப்  புராணம் ஆகிய சில நூல்களே இவற்றுட் சில
கொண்டியங்குகின்றன.     மடக்குக்களெல்லாம்      விசேடமாய்
நூல்களிற்   பயின்று   வாராமல்   அவற்றுள் ஆங்காங்கு வரும்.
இடைக்காலத்துத்   தோன்றிய   பலர் சொல்லின்பம் நாடுபவராய்ச் 
சொல்லணிகளைப் பெரிதும்   வழங்குவாராயினர். இவர்கள் யமகம்
திரிபு    முதலிய   செய்யுட்கள்   பல   இயற்றினர்.   பின்னர்த்
திரிபந்தாதிகளும்    சிலேடை   வெண்பாக்களும்   அளவிறந்தன
வெழும்பின.      இவையனைத்தும்   பெரும்பாலும்     பொருட்
செறிவிலவாய்   வீண்   சப்த   ஜாலங்களாய்  மட்டில் முடிந்தன.
இக்காலத்திலும்   தென்னாட்டிற்   புலவர்   பலர்   யமகந் திரிபு
பாடுதலையே   பெரிதாக  வெண்ணி வாணாளை வீணாள் கழிப்பர்.

     "சொன்னலத்தினும்        பொருணலமே     சிறந்ததெனப்
பேரறிவாளர்   யாவருங்   கூறுவர். யமகந் திரிபுள்ள பாடல்களை
'உயிரில்லாப்   பாட்டுகள்'   என்றும்,   கருத்து   நலம் வாய்ந்த
கற்பனையுள்ள   பாடல்களை   'உயிருள்ள பாட்டுகள்'   என்றும்


    * இராமலிங்க சுவாமிகள், திருவருட்பா