| சொற்களை ஆளும் முறையில்தான் வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு சொல்லுக்கும் நேரான பொருள் ஒன்று உண்டு; அல்லாமல், வழி வழியாக அந்தச் சொல் ஆளப்படும் இடங்களின் தொடர்பால் அதனுடன் சேர்ந்தமைந்த கருத்துகள் உண்டு; அச்சொல்லுக்கென ஒலித்தன்மை ஒன்று உண்டு. புரட்சி என்ற சொல்லைக் காண்போம். சொல்லுக்கு நேர்ப்பொருள் புரளுதல், மாறுதலடைதல் என்பது. அரசியலில் பெரிய மாறுதலுக்கு அடிப்படையான சில நிகழ்ச்சிகளைக் குறிக்க அச்சொல் வழங்கிய காரணத்தால், அரசியல் தொடர்பு பெற்றுவிட்டது; அதனால்தான் அச் சொல்லுக்குப் பழங்காலத்தில் இல்லாத புதுப்பொருள் இப்போது வழங்குகிறது. அன்றியும், அந்தச் சொல்லின் ஒலியில் வல்லினம் மிகுந்திருப்பதால் அது வன்மையான உணர்ச்சியுடன் சேர்ந்து ஒலிக்கும் தன்மை பெற்றுள்ளது. உரைநடையில் சொல்லை ஆளும் புலவர் நேர்ப பொருளை யும் தொடர்பான சில கருத்துக்களையும் பொருட்படுத்தி ஆளுகிறார். ஆனால் பாட்டில் சொற்கள் அமையும்போது, வன்மையான உணர்ச்சிக்கு வேண்டிய இடத்தில் வன்மையான சொற்களும, மென்மையான உணர்ச்சிக்கு உரிய இடத்தில் மென்மையான சொற்களும். உணர்ச்சி மிக்க இடங்களில் உணர்ச்சி மிக்க சொற்களும், இனிமையும் அழகும் மிக்க இடங்களில் நயமான சொற்களும் வந்து அமைகின்றன. வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து ஒருவர் மிக்க உணர்ச்சியோடு பேசும்போது, அவருடைய அந்த உணர்ச்சிக்கு ஏற்ற சொற்களும் ஒலிகளும் வருதலைக் காணலாம். அவரே வீட்டினுள் சென்று தம் குழந்தையோடு கொஞ்சும்போது குழைவான சொற்களையும் ஒலிகளையும் கொண்டு பேசுவதைக் காணலாம். உணர்ச்சியோடு பேசும் பேச்சில் இவை வருவதானால், உணர்ச்சிக்கு வடிவம் தருவதாகிய பாட்டில் இவை எவ்வளவு இன்றியமையாதன என்பது எளிதில் உணரப்படும். படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் |