| இவ்வாறு உணர்ச்சிகள் புலப்படுதற்கு ஆங்காங்கு அமைந்துள்ள சொற்களும் அவற்றின் ஒலியும் பெரிதும் துணை புரிதலைக் காணலாம். புதிய பொருளுணர்ச்சி சில சொற்கள் ஒன்றோடொன்று சேர்ந்து அமையும் வகையாலேயே, முன்பு அச்சொற்களில் இல்லாத புதிய ஒலியின்பமும் புதிய பொருளுணர்ச்சியும் ஏற்படுகின்றன. அவ்வாறு அவை புதிய ஒலியின்பமும் பொருளுணர்ச்சியும் தருமாறு சேர்த்து ஆளும் திறமை வியப்பை ஊட்டுவதாகும். எப்படி அவற்றைச் சேர்த்துப் புதுப்பயன் காண முடிந்தது என்பது புலவருக்கே தெரியாது. அகராதியில் இல்லாத புதுப் பொருளுணர்ச்சியை அவை பெற்று நிற்கும் போது தான் அவருக்கும் அந்த ஆற்றல் புலனாகும். வெட்டி அடிக்குது மின்னல் - கடல் வீரத் திரைகொண்டு விண்ணை இடிக்குது கொட்டி இடிக்குது மேகம் - கூ கூஎன்று விண்ணைக் குடையுது காற்று சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம் எட்டுத் திசையும் இடிய - மழை எங்ஙனம் வந்த தடாதம்பி வீரா அண்டம் குலுங்குது தம்பி-தலை ஆயிரம் தூக்கிய சேடனும் பேய்போல் மிண்டிக் குதித்திடு கின்றான் - திசை வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர் செண்டு புடைத்திடு கின்றார் - என்ன தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம் கண்டோம் கண்டோம் - கண்டோம் இந்தக் காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்.* இந்தப் பாட்டுகளில் அமைந்த சொற்கள் எல்லாரும் அறிந்த எளிய சொற்களே, ஆயினும் அவற்றின் அமைப்பும் ஒலியும், ஒரு பெரும் புயலைக் கண்முன் காட்டுவன போல் உள்ளன. * பாரதியார் பாடல்கள்,மழை |