பக்கம் எண் :

192இலக்கியத் திறன்

Untitled Document

     இத்தனையும்   இயல்பாக   வந்து அமையாவிட்டால் பயன்
இல்லை. உள்ளுணர்ச்சி முன் வந்து நிற்க, அதற்கேற்ற பொருளும்
ஒலியும்   உடைய    சொற்கள்  பின்வந்து ஏவல் புரியவேண்டும்.
மரத்தில் இலைகள் இயற்கையாக  வந்து அமைதல் போல்,பாட்டின்
பகுதிகளும் இயற்கையாக வந்து  அமைய வேண்டும் என்று கீட்ஸ்
என்னும் கவிஞர் கூறினார்.

     சில   இடங்களில்  சொல்லாட்சியில் அழகு விளங்கும்; சில
இடங்களில்   அழகு ஒன்றும் இன்றி, ஆழ்ந்த உணர்ச்சி மட்டுமே
புலனாகும்.   வேண்டும்   என்றே   அலங்காரம்  கருதிப் புலவர்
சொற்களை   ஆண்டிருக்கிறார்  என்று   கருத   இடம் இல்லை.
அவருடைய   உள்ளத்தில்   அழகிய  காட்சிகளோ மகிழ்ச்சியோ
ஏற்படும்போது   அவற்றிற்கு   ஏற்ப   அழகு   தரும்  சொற்கள்
அமைகின்றன.   ஆயின்,   ஆழ்ந்த துயரம் முதலிய உணர்ச்சிகள்
உள்ள   இடங்களில்,   அத்தகைய   சொற்கள்   அலங்காரமான
சொற்கள்   அமைவதில்லை.   ஒருகால் அமைந்திருப்பின், புலவர்
அப்போது உற்ற உணர்ச்சியில் போதியஆழம் இல்லை என்றுதான
உணரவேண்டும்.

     புதியனவாய் வழங்கும் அறிவியல் சொற்கள் (Scientific and
technical terms) பாட்டுகளில் அவ்வளவாக இடம் பெறாமைக்குக்
காரணம்,   அவை   உணர்ச்சித்  தொடர்பற்று  நிற்றலே ஆகும்;
முன்னமே உணர்ச்சி மிக்க சூழ்நிலையில் வழங்கப்படாத - உணர்ச்
சியின்   உறவு   அமையாத - சொற்கள்  அவை. ஆகவே கலை
யுலகத்தில் அவை புகுவதற்குத் தகுதி பெறாமல் நிற்கின்றன.*

அணிகள்

     பாட்டில்       ஆளப்படும்   சொற்கள்   நேர்ப்பொருளை
உணர்த்துவதோடு   தொடர்பான   கருத்துகளையும் உணர்த்துவன
எனக் கண்டோம்.   அதற்குக்   காரணம்,   புலவருடைய உள்ளம்
ஒன்றை   உணரும்போது   அதன்  தொடர்பான மற்றொன்றையும்
உணர்வதுதான்.  தொடர்பான மற்றொன்று,  முன்னைய ஒன்றனுக்கு
ஒப்பானதாக இருந்தால் அந்த ஒப்புமையிலே  புலவரின் அகக்கண்


     * And when the moment of intense feeting comes
fine phrasing is out of question.
      P.H.B. Lyon, The Discovery of Poetry, p.184.