| ஒன்றனுக்கு ஒன்று உள்ள வேறுபாட்டையே ஆர்வத்தோடு கண்டு போற்றுகின்றனர். ஒரு தன்மையனவாய்த் தோன்றும் பொருள் களையும் வேறுபடுத்தி அறிதலே அறிவியல் துறையிலும் கடமையாக உள்ளது. ஆயின், கலைஞரோ, வேறுபட்ட பொருள்களுக்குள்ளும் ஒற்றுமை கண்டு இயைப்பதில் கருத்தாக உள்ளனர். படைப்பில் உள்ள எல்லாப் பொருள்களுக்குள்ளும் உறவு காண்கின்றனர். அந்த மகிழ்ச்சியே உவமையாகவும் உருவகமாகவும் அவர்களின் இலக்கியத்தில் அமைகின்றது. ஒரு குடும்பத்தார்க்குள் எவ்வளவோ ஒற்றுமைப் பகுதிகள் c sd. தோற்றம், நடை முதலியவற்றில் அந்தப் பகுதிகள் புலப்படுகின்றன. ஆயினும், அந்தக் குடும்பத்துப் பங்காளிகள் தமக்குள் உள்ள வேற்றுமைகளையே பாராட்டுகின்றனர். அவன் வேறு, நான் வேறு, அவன் இப்படி, நான் இப்படி என்று வேற்றுமைகளையே போற்றுகின்றனர். ஆனால் அயலார் ஒருவர் புதியவராக அந்தக் குடும்பத்தாரிடையே வந்து பழகுவாரானால் அவருக்குத்தான் அவர்களின் உடல்கூறுகளிலும் நடை முதலிய வற்றிலும் உள்ள ஒற்றுமைப் பகுதிகள் தெளிவாகப் புலப்படும். அத்தகைய ஒற்றுமை காணும் புதுமைக் கண் கொண்டு புலவர்கள் இயற்கையை நோக்குவதால் அவர்களுக்கு உவமை முதலிய அணிகள் இயல்பாக வந்து அமைகின்றன. உருவகம் ஒரு பொருளின் அழகைக் கண்டு மற்றொரு பொருளின் அழகை நினைத்து இதனை அதனோடு ஒப்பிடுதல் உவமை. அதே மனநிலை மேலும் சிறிது வளர்ந்து, இரண்டு பொருளையும் வேறு வேறாகக் காணாமல், ஒன்றிலேயே மற்றொன்றைக் கண்டால் அது உருவகம் எனப்படும். இவ்வாறு இருவேறு பொருளை ஒன்றுபடுத்தி இயைப்பதால்,* இரண்டனைச் சார்ந்த தனித்தனியுணர்ச்சிகளும் சேர்ந்து ஆற்றல் மிக்க உணர்ச்சியாய் வளர்கிறது. இவ்வளர்ச் சியால் பாட்டுப் பெறும் பயன் பெரிது. *.Metaphor is the supreme agent by which disparate and hither to unconnected things are brought together in poetry for the sake of the effects upon attitude and impulse which spring from their collocation and from the combinations which, the mind then establishes between them - I.A. Richards, Principles of Literary Criticism, p.239 |