| பொருளை விரிவாகக் கூறவேண்டும். அவ்வளவு விரிவையும் விட்டு இருண்டது என்று ஒரு சொல் சொன்னவுடனே, அதே உவமையின பொருள் ஆற்றலுடன் வெளிப்படுகிறது. உவமை இவ்வாறு அடங்கி உருவகமாக வெளிப்படும் போது, அந்த அடக்கத்தில் ஆற்றல் பிறப்பது ஒரு விந்தையே ஆகும். உருவகம் என்பது அடக்கிச் செறிந்த உவமையே என்று அறிஞர் கூறுவர்.* மற்ற அணிகள் கலைஞர் தம் உணர்ச்சியையும் கற்பனையையும் உணர்த்துதல் போல், தம் கலைத்திறனை வெளிப்படையாகக் காட்டுதல் இல்லை. கலைத்திறனை மறைத்துக் கலைப்பயனை மட்டும் நல்குவர் அவர். ஆயின்,ஆராய்ச்சியாளரோ மறைந்துள்ள கலைத்திறனை ஆய்ந்து காணுதலையே கடமையாகக் கொண்டவர். அவ்வாறு ஆயும்போது காணப்பட்ட சில வகைத் திறங்களுக்குப் பெயரும் இலக்கணமும் வகுக்க முற்பட்டனர். சிலவகைத் திறங்கள் அவர்களின் ஆராய்ச்சிக்கு எட்டாமல் நின்றபோதிலும் அவற்றிற்கும் பெயரும் இலக்கணமும் வகுக்க முயன்றனர். அந்த முயற்சியின் பயனாக ஏற்பட்டதே அணியிலக்கணம் எனப்படுவது. தொல்காப்பியனார் அணிகளை அறுபதும் நூறுமாக வகுத்துப் பாகுபாடு செய்யவில்லை. பல அணிகளுக்கு அடிப்படையாக உள்ள உவமை என்ற ஒன்றை மட்டும் நன்கு விளக்கினார். தண்டியலங்காரம் முப்பத்தாறு அணிகளைக் கூறுகிறது. மாறனலங்காரம் அறுபத்து நான்கு அணிகளை எடுத்துரைக்கிறது. குவலயாநந்தம் என்ற நூல் நூறு அணிகளைக கூறுகிறது. ஆயினும் அவற்றுள் பல வேண்டாத விரிவுகளாக உள்ளன. பின்வருநிலையணி, நிரனிறையணி, சிலேடையணி விரோதவணி, புணர்நிலையணி, ஒப்புமைக்கூட்டவணி முதலியவை பாட்டின் பொருட்சிறப்புக்குப் பயன்படாதவை. முன்ன விலக்கணி, அதிசயவணி, ஏதுவணி, ஆர்வமொழியணி, தன் மேம்பாட்டுரையணி முதலியவை சிறப்பொன்றும் இல்லாதவை. * Metaphor is nothing but compressed simile. - M.R. Ridley, poetry and the ordinary Reader, p.64. |