பக்கம் எண் :

வடிவம் 199

Untitled Document

     கட்டடக்   கலையில்  அலங்காரங்கள் உண்டு. மாடங்களும்
கூடங்களுமாகக் கட்டும் கட்டடத்தில் அலங்காரங்கள் அவற்றோடு
எவ்வளவு  பொருத்தமாக அமைகின்றனவோ அவ்வளவு பொருத்த
மாக   அணிகள்   பாட்டில்   அமையவேண்டும்.   கட்டடத்தின்
அலங்காரங்கள், கட்டடப்பகுதிகளை விட்டுத் தனியே நிற்பதில்லை;
அலங்காரங்களும்   கட்டடப்   பகுதிகளாகவே   விளங்குகின்றன;
ஒட்டவைத்தவை   போன்ற   நிலையில்   அவை  இல்லை. தவிர
கட்டடத்தின்   பெருமையையோ    சிறப்பையோ அவை மறைப்ப
தில்லை;   அதன்     பெருமையையும்   சிறப்பையும்   எடுத்துக்
காட்டவே   உதவுகின்றன.   அன்றியும்,  கட்டடத்தின் பயனுக்கும்
அலங்காரங்கள்   குறுக்கே நின்று இடர்ப்பாடு விளைவிப்பதில்லை;
அலங்காரங்களைக்     கண்டு    அனுபவிப்பவர்   கட்டடத்தின்
பயனையும் பெற்று அனுபவிக்கலாம்.

      இவ்வாறு,   பாட்டின்     பிரிக்க    முடியாமல் இணைந்த
பகுதிகளாய்,   பாட்டின்   உணர்ச்சிச்   சிறப்பையும்   கற்பனைப்
பெருமையையும்     மறைக்காமல்    எடுத்துக்   காட்டுவனவாய்,
பாட்டின்     பயனுக்கு   ஊறு   விளைக்காதனவாய்   அமையும்
அணிகளே கொள்ளத்தக்கன.

குறிப்புப் பொருள் முதலியன

     தொல்காப்பியனார்    உவமையை விளக்கியதோடு நிற்காமல்,
இறைச்சி என்ற    ஒன்றைப்   பற்றியும்   கூறியுள்ளார்.பாட்டில்
நேரான கருத்தைவிட,   குறிப்பு முறையில் புலப்படும் உணர்ச்சியே
சிறப்புடையது என அவர் தெளிந்தார்.அந்த உணர்ச்சி ஒரு குறிப்பு
உடையதாய் வருமாயின்,   அக்  குறிப்புப் பொருளை உணர்த்தும்
ஆற்றலும் பாட்டுக்கு இருப்பதைக் கண்டார்.  அத்தகைய குறிப்புப்
பொருளை   மறைத்துப்    புலப்படுத்துதலையே  அவர் இறைச்சி
என்றார்.   வடமொழியார்   அதனை   'தொனி'   என்பார். அது
பாட்டுக்குச்   சிறப்பானது   அதனைப்   பிற்காலத்தார்   மேலும்
விளக்கிப் போற்ற மறந்துவிட்டனர்.

     புலவர் தம்   பாட்டில் உணர்ச்சிக்கு  உரிய பொருள்களைப்
படைத்துக்  காட்டும்போது  உணர்ச்சி சிறப்பதற்கு ஏற்ற முறையில்
தானே      படைக்கவேண்டும்?   உலகில்,   மனிதர்  தம்மைப்


     * தொல்காப்பியம், பொருளியல், 1175-1177