| நடை ஒரு காவியத்தையோ கதையையோ படிக்கும்போது யாரோ ஒருவர் நமக்கு எடுத்துச்சொல்வது போல உணர்கிறோம். காவியத்திலும் கதையிலும் வரும் மாந்தர் (பாத்திரங்கள்) சொல்வன அல்லாமல், அவர்களுக்குப் பின்னே இருந்தவாறு, அவர்களின் வாயிலாக ஒருவர் பேசுவது போல் உணர்கிறோம்.அவ்வாறு பேசும் குரல் நூலாசிரியரின் குரலானால், அந்தக் குரலின் சிறப்பியல்தான் அவருடைய நடை என்று கூறப்படும்.* செய்யுளாயினும் உரைநடையாயினும் ஒருவர் எழுதும் எழுத்து முழுவதிலும் அவருடைய நடை ஒன்று அமைந்து விடுகின்றது. அதை மற்றொருவர் பின்பற்ற இயலாது. பின் பற்றி எழுத முயன்றால், ஒரு சில பகுதிகளில் வெற்றிபெறலாம். அதற்கும், முன்னவரின் மனநிலை, சொற்கோவை, விருப்புவெறுப்புக்கள், உணர்ச்சிகள் முதலிய யாவற்றையும் விடாமல் மேற்கொண்டு நின்றால்தான் இயலும். அவ்வாறு ஒருவருடைய மனநிலை முதலியவற்றை எவ்வளவு காலம் மற்றொருவர் மேற்கொண்டு வாழ்தல் இயலும்? அவ்வாறு வாழ முயன்றால், தமக்கு என்று ஒருவகை வளர்ச்சியும் இல்லாமற் போகும்.அம் முயற்சியும் நெடிது நிலைக்காது. தலின், ஒருவர் நடையை மற்றொருவர் பின்பற்றி எழுதுதல் என்பது இயலாதது; ஓரளவு இயன்றாலும் பயனில்லாதது. ஒவ்வொருவர்க்கும் கையெழுத்தில் வேறுபாடு இருத்தல் போல் நடையிலும் வேறுபாடு உள்ளது கையெழுத்துவேறு பாட்டுக்குக் காரணம். இளமை முதல் கைக்குத் தந்த பழக்கமும் கையை ஆளும் மனத்தின் செம்மை வேகம் வன்மை மென்மை முதலிய பண்புகளும் ஆகும். அது போலவே, நடை வேறுபாட்டுக்குக் காரணமும், அந்தந்த ஆசிரியர் உள்ளத்திற்குத் தந்த பழக்கமும், அந்த உள்ளத்தின் உண்மை நேர்மை வேகம் * In all literary structures we are aware of a quality that we may call the quality of a verbal personality or a speaking voice... something different from direct address, though related to it. When this quality is felt to be the voice of the author himself, we call it style. N. Fyre, Anatomy of Criticism, p. 268. |