| ஒரு காலத்தில் வாழும் எல்லோர்க்கும் ஒவ்வொரு வகையான நடை இருப்பதாகக் கருதலாகாது. கலைஞர் தவிர, மற்றவர் எல்லோரும் ஏறக்குறைய ஒரே வகை நடையை உடையவர். அவர்கள் எழுதும் மொழி, அக் காலத்து வழக்கில் உள்ள பொது மொழியே. அதை ஏறக்குறைய அவ்வாறே கற்று எழுதுகின்றனர். ஆனால் கவிஞர், நாடக ஆசிரியர்,கதை ஆசிரியர் முதலியவர்கள் அந்தப் பொதுமொழியையே தம்தம் உணர்ச்சி யனுபவத்திற்கு ஏற்றவாறு இயைத்தலால் அவரவர்க்கென ஒரு நடை அமைந்து விடுகின்றது. கவிஞர் ஒருவரின் உள்ளப் பண்பை மட்டும் அல்லாமல், அந்தப் பண்பை உருவாக்கியவற்றையும் - அவர் வாழ்ந்த சூழல், கற்ற நூல்கள், பழகிய பழக்கம் முதலியவற்றையும் - நடை புலப்படுத்தும் என்பர்; அவருடைய வாழ்வில் அவர் படிப்படியே பெற்றுவந்த வளர்ச்சிகளையும் நடையில் காணலாம் என்பர்1. கணக்கு முதலிய அறிவியல் துறைகளில் அறிகுறிகள் உள்ளன; அவற்றிற்குத் துணையாக வரையறுத்த பொருள் உடைய சொற்களும் உள்ளன. அந்த அறிகுறிகளையும் சொற்களையும் கொண்டு திட்ப நுட்பமாகக் கணக்கு முதலியவற்றை உணர்த்த முடிகிறது. அங்கு நடை என்பது ஒன்று இல்லை; ஒரே வகையாகத் தான் எழுதமுடியும் ஆதலின், வேறுபாடுகள் இல்லை2. ஆனால் இலக்கியத் துறையில் நடை என்பது ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வொருவகையாய் அமைந்து வேறுபடுகிறது.ஆராய்ச் சிக்கு எளிதில் எட்டாத வேறுபாடுகள் இலக்கிய நடையில் காணப்படுகின்றன. காரணம் என்ன? சொற்கள் மூளையின் எண்ணங்களை வெளிப் படுத்து வனவே. கருத்துக்களின் அறிகுறிகளாக நிற்பவை சொற்கள்.
1. All the factors which combine in the making of a man will play their parts in giving to his style its well-defined individuality of form and colour; all the phases of his outer and inner experience will register themselves in it. -W.K. Hudson, An introduction to the Study of Literature, p.30 2. If the matter of writing were always purely intellectual,style would be compartaively simple thing. Its only virtue would be precision,and its laws might be few and rigid. -C.T. Winchester, Some Principles of Literary Criticism P 215 |