இரண்டிலும் குறை இருந்து. கலை தாழ்வுறுதலும் உண்டு*.
காணுமாறு செய்தல் ஒருவர் உணர்ந்த உணர்ச்சியைப் பிறர்க்கு உணர்த்துவது எவ்வாறு?உணர்ந்தேன் உணர்ந்தேன் என்று உணர்ச்சியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தால் பிறர்க்கு உணர்த்தல் இயலாது; திரும்பத் திரும்ப அந்த ஒருவர் உணர்வதாலும் இயலாது. அந்த உணர்ச்சி அவருடைய உள்ளத்தில் எழுந்ததற்குக் காரணமான பொருளை (அல்லது நிகழ்ச்சியைக்) கண்ணெதிரே காட்டல் வேண்டும்; அல்லது, கற்பனையில் காணுமாறு செய்தல் வேண்டும். முயலையே காணாதவர்க்கு முயலின் அழகை எத்தனை வகையாகச் சிறப்பித்துச் சொன்னாலும் பயன் என்ன? என்ன அழகு என்ன அழகு என்று வாயாரப் புகழ்ந்தாலும் பயன் இல்லை. நான் கண்டேன். நான் மகிழ்ந்தேன் என்று தன் உணர்ச்சியைக் கொட்டினாலும் பயன் இல்லை. முயலைக் கண்ணெதிரே கொணர்ந்து காட்ட வேண்டும்; அப்போது அவர் அதன் அழகைக் கண்டு வியந்து போற்றுவார், இது வாழ்க்கை. கலைஞராயின் இவ்வாறு முயலைக் கொண்டுவந்து காட்ட வேண்டுவதில்லை. முயலின் அழகிய வடிவத்தை ஓவியமாக வரைந்து காட்டலாம்; அல்லது பல சொற்களால் ஒரு பாட்டு எழுதிக் காட்டலாம். இவ்வாறு தாம் பெற்ற அழகுணர்ச்சிக்கு ஒரு வடிவம் தந்து பிறரும் தம் கற்பனையில் காணுமாறு செய்தால்தான்1 அவருக்கு அதே அழகுணர்ச்சி ஏற்படும். இது கலை. ஆகவே, வாழ்க்கையே ஆயினும், கலையே ஆயினும் நாம் பெற்ற உணர்ச்சியைப் பிறரும் பெறுமாறு செய்ய வேண்டுமானால், உணர்ச்சியைப் பற்றிப் பேசுதலால் பயன் விளையாது; உணர்ச்சிக்குக் காரணமான பொருளை அவர்களின் புறக் கண்ணோ, அகக் கண்ணோ காணுமாறு செய்தல் வேண்டும். இதுவே உணர்ச்சியை உணர்த்தும் வழியாகும். * Sometimes art is bad because communication is defective, the vehicle inoperative: sometimes because the experience communicated is worthless; sometimes for both reason. -I.A. Richards, Principles of Literary Criticism, p. 199. 1. Words have not described a fact in poetry, but they have recreated our minds the very fact itself L.Abercrombie, The Idea of Great Poetry, P.20. Poetry is the translation of experience into language Ibid, p.23. |