ஒருவன் மரத்திலிருந்து விழுந்து அடிபட்டான் என்ற செய்தி யை ஒருவர்க்குக் கூறினால், 'அப்படியா? 'அய்யோ!' என்று சில சொற்கள் சொல்லி அவர் அமைதி பெற்று விடுவார். (அவருக்கு நெருங்கிய நண்பனாகவோ அவருடைய மகனாகவோ இருந்தால், அடிபட்டவரின் பெயரைக் கேட்ட அளவிலேயே திடுக்கிட்டு வருந்துவார்.அது பாசத்தின் விளைவு, இல்லையேல், உதட்டளவில் இரக்கம் காட்டி அமைவார்). ஆனால், அடிபட்டவனை நேரில் காணுமாறு அழைத்துச் சென்று காட்டினால், உதட்டிரக்கம் காட்டிய அவரே அப்போது நெஞ்சம் நெகிழ்ந்து நிற்பார். வாழ்க்கையில் நடைபெறும் இதனையே கலை மிகத்திறமையாக வேறு வகையில் செய்து முடிக்கிறது. கலையின் சிறப்பியல்பு அறிவியல் ஒன்றைப் பற்றி விளங்க எடுத்துரைப்பது; அதன் அளவுகளையும் தன்மைகளையும் பற்றி விளக்குவது. ஆனால் இலக்கியம் அந்தப் பொருளையே நம் மனக்கண்ணால் காணுமாறு செய்வது. அதன் அளவு தன்மை முதலியவற்றை மனம் தானே கற்பனை செய்து உணர்ந்து கொள்ளுமாறு செய்வது. அறிவியல் தாமரை மலரைப் பற்றி விளக்குவதானால், அதன் சுற்றளவு, உயரம் எடை, நிறம் முதலியன பற்றிக் கணக்கிட்டு விரிவாகக் கூறி நிற்கும். இலக்கியம் தாமரை மலரைப் பற்றி இவ்வளவு விரிவாகக் கூறாது; இரண்டொரு குறிப்புகளால், மனக் கண்ணில் அந்த மலரையே கொண்டு வந்து நிறுத்தி அதன் அழகை மனம் உணருமாறு செய்துவிடும். அதனால், அறிவியல் ஒரு பொருளின் தன்மையை விளக்குவது என்றும், இலக்கியம் அந்தப் பொருளால் பெற்ற அனுபவத்தையே தந்து விடுவது என்றும் அறிஞர் கூறுவர், வரலாறு அசோகனைப் பற்றி எவ்வளவோ கூறினும் உள்ளத்தைத் தொடுதல் அரிது; அசோகனைப்பற்றி ஒரு நாடகம் நடைபெறுமானால் காண்பவர் அனைவருடைய உள்ளத்தையும் அந்த நாடகம் தொட்டுக் கசிந்துருகச் செய்துவிடும். இதுவே கலைக்கு உள்ள சிறப்பியல்பு ஆகும்*. * By the creation of vividly personal and credible characters. impulses may be transfered alive into our minds which otherwise could not have been given to us at all. -L. Abedrcrombie, the Idea of Great Poetry. p. 144. |