பக்கம் எண் :

212இலக்கியத் திறன்

Untitled Document

     மகள்   தன்னிடம் சொல்லாமல் காதலனோடு வெளியூர்க்குச் சென்றுவிட்டாள்.   வீடும்   தெருவும்  ஊரும் தேடிய பிறகு மகள் போய்விட்டதைச் செவிலித்தாய் உணர்ந்தாள். அவளுடைய துயரம் அறிவைக் குலைத்துவிட்டது.   மகள் ஆடிய இடங்களை எல்லாம்
நோக்கி அழுதாள்.  மகள்   விளையாடிய   பொருள்களை நாடிச்
சென்றாள்.   அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்து அழுதாள். மகள்
விளையாடிய   பாவையைப்   பார்த்தாள்.  "இது பாவையான என்
மகள் விளையாடிய பாவை!"   என்றாள்.  "இது கிளி போன்ற என்
மகள் வளர்த்த கிளி! "  என்றாள்.   பித்துப்   பிடித்தவள் போல்
பேசினாள்.

      இதுஎன் பாவைக் கினியநன் பாவை
     இதுஎன் பைங்கிளி எடுத்த பைங்கிளி
     இதுஎன் பூவைக்கு இனியசொற் பூவை...1


    இதுபோன்ற நிகழ்ச்சியைப் புலவர் ஓதலாந்தையார் எங்கேனும்
ஒரு குடும்பத்தில்   பார்த்திருப்பார்.   பல  காலம் கழித்து அந்த
நிகழ்ச்சியைப்    பாட்டாகப்   பாடியபோது,   அந்த   உணர்ச்சி
முழுவதையும்   திரும்பக்   கொணர்ந்து   பாட்டில்   படைத்துத்
தந்துள்ளார்.

கற்பனை அனுபவம்

     உணர்ச்சியுடன்   கண்டதொரு   நிகழ்ச்சியை   உள்ளத்தே
அவ்வனுபவம் முழுதும்  புலப்படத் திரும்பக் கொணர்ந்து பாடுதல் ஒருவகை;கற் பனையாகவே ஒன்றைப் படைத்து, அதற்கு இயைந்த
உணர்ச்சி முழுதும்   பெற்றுத்  தம் அனுபவமாகக்கொண்டு, பிறகு
அத்தனையும்   புலப்படப்   பாடுதல்  மற்றொரு வகை. முன்னது
எவர்க்குக்   கைகூடுமோ    அவர்க்கே   பின்னதும்  கைகூடும்,
வாழ்க்கையின்  அனுபவமாய்ப்   பெற்ற உணர்ச்சியைத் திரும்பக்
கொணர்ந்து    பாட்டாக   வடிக்க   வல்லவரே,   கற்பனையில்
உணர்ச்சியைப்   பெற்றுப்   பின்னர்ப்   பாட்டில்  கொணர்ந்து
தருதலிலும் வல்லவராவர்.


     1. ஐங்குறுநூறு; 375