வெவ்வாய் ஓரி முழவாக விளிந்தார் ஈமம் விளக்காக ஒவ்வாச் சுடுகாட் டுயரரங்கின் நிழல்போல் நுடங்கிப் பேயாட எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட இவ்வா றாகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க் கியல்வேந்தே. பற்றா மன்னன் நகர்ப்புறமால் பாயல் பிணம்சூழ் சுடுகாடால் உற்றார் இல்லாத் தமியேனால் ஒதுங்கல் ஆகாத் தூங்கிருளால் மற்றிஞ் ஞாலம் உடையாய் நீ வளரு மாறும் அறியேனால் எற்றே இதுகண் டேகாதே இருத்தி யால்என் இன்னுயிரே1. இப்பாட்டுகள் இரண்டும், சீவகன் சுடுகாட்டில் பிறந்த போது அவனுடைய நிலைக்காக இரங்கிப் பெற்ற தாய் வருந்தியதாகப் பாடியவை. புலவர் திருத்தக்கதேவர்க்கு இந்த அனுபவம் இருந்த தில்லை. கற்பனையால் உணர்ந்து அவர் பாடினார். படிக்கும் நாமும் அந்தத் தாயின் துயர் நிறைந்த உள்ளத்தையும் அந்தத் தாய் இருந்த சூழலையும் நன்றாக உணரமுடிகிறது. அவ்வாறு உணர்த்தும் திறன் புலவர்க்கு அமைந்திருந்தது. பெரும் பயன் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்பது சான்றோர் குறிக்கோள். சமயத் துறையில் இது நிறைவேறுதல் எளிது அன்று. கலைத் துறையில் இது எளிதாக நிறைவேறுகிறது; ஏன் எனில், தாம் பெற்றதைப் பிறரும் பெறுமாறு செய்யாவிடில், அது கலையாவதில்லை. அதனால்தான் திருவள்ளுவர் கற்றவரின் 1. சீவகசிந்தாமணி, நாமகள் இலம்பகம் 279, 280 |