பக்கம் எண் :

உணர்த்தல் 217

Untitled Document

அத்தகைய   வருணனை  சலிப்பை  விளைவிப்பதாகும். கற்பனை
வளம் இல்லாதவர்   தாம்  கண்ட எல்லாவற்றையும் வருணிப்பார்
என்றும், கற்பனை   வளம் உடையவர் தாம் உணர்ந்த சிலவற்றை
மட்டும் ஒரு சில   அடிகளால் விளக்குவார் என்றும் வின்செஸ்டர்
என்ற அறிஞர் கூறியுள்ளார்*.

     உயர்ந்த   புலமை  பெற்றவர்கள் ஒரு பெண்ணின் அழகை வருணிக்கும்போது   ஒரு சில சொற்களால் அவளுடைய அழகை
விளக்கி அமைகின்றனர்.  ஆனால் இடைக்காலத்துப் புலவர் சிலர்
எல்லா   உறுப்புகளையும்  விடாமல்   வருணிப்பதே கலைத்திறம்
என்று   மயங்கினர்.   முடி   முதல்   அடி  வரையில் விடாமல்
வருணனை  செய்தனர். ஒவ்வோர் உறுப்பையும் சில பாட்டுகளால்
பல   உவமைகள்   அமைத்து  விளக்கியுள்ளனர்,   கேசாதிபாத
வருணனை      பாதாதிகேச  வருணனை   என்று   கூறப்படும்
அவ்வருணனைகள்    உண்மையாகப்  பார்த்தால்   கலைத்திறன் அற்றவைகளே ஆகும்.

      பசும் பழப் பலவு1
     சுவை இலை ஆர்2
     வலம்கரி மராஅம்3
     பகுவாய்ப் பல்லி4
     பேழ்வாய் உழுவை5
     செவ்வாய்ப் பாசினம்6
     வளைவாய்ப் பாசினம்7

முதலிய சிறு சிறு தொடர்களில் ஒரு சில சொற்களே புலவர் கண்ட
பொருளை   நாமும்   காணுமாறு  நம் உள்ளத்தில் பதியவைத்தல்
கருதத்   தக்கது. இத்தகைய  தொடர்களால் பெறும் பயனைப் பல
பாட்டுகளால்   ஆகிய   நீண்ட வருணனைகளிலும் பெற முடிவது
இல்லை.


     * The difference between an unimaginative treatment
of nature   and an imaginative treatment often seems to
be principally   in the   fact  that the one writer tries to
describe all   he   sees, while the other enders in a few
epithets of images what the feels.

     -C.T. Winchester, Some Principles of Literary
Criticism, p. 132.

     1. அகநானூறு, 189.    2. ஷெ 104. 3. ஐங்குறுநூறு,
     4. 384, நற்றிணை, 144, 5. அகநானூறு, 277.
     6. நற்றிணை, 206.     7. ஷெ 373.